Saturday, January 8, 2022

கலியன் ஒலி மாலை

1

கலியன் ஒலி மாலை 


பிரதம சதகம் :


திருமந்திரத்தின் பெருமையும்  அதனைக் கொண்டு தான் பெற்ற பயனையும் இதில் உரைக்கிறார் ஆழ்வார்.


திருமந்திரத்துக்கு எல்லை நிலமான திவ்யதேச அனுபவத்தில் இழிக்கிறார் ஆழ்வார் .


திருமந்திரம் விளைந்த பூமியும் , மந்திர பிரதனான  ஆசார்யனையும் அநுசந்திக்கிறார் அடுத்து.


தன் நெச்சுக்கு உபதேசமாய்  அவைதிகமானவற்றை வைதிகமாக்கினதுபோல் அபுருஷார்த்தமானவற்றை புருஷார்த்தமாகின படி. .


பெரிய பிராட்டியை முன்நிறுத்தி க்ருத்ய அகரணம், அக்ருத்ய கரணாதி தோஷங்களை அனுசந்தித்தபடி நைமிசாரண்யத்து எம்பெருமான் திருவடிகளில் சரணம் புகுதல்


அடுத்து ஸம்சாரகிலேச பய நிர்த்தகனான சிங்கவேள் குன்றத்து எம்பெருமானை அநுபவிக்கிறார் ஆழ்வார்.


இனிமேல் உள்ள நான்கு பதிகங்களிலும் பேற்றுக்கு  உறுப்பாக தன் வெறுமையைச் சொல்லி உய்யுபாயமாக திருவேங்கடவன் தாள்களில் சரணம் புகுகிறார் ஆழ்வார். .


த்விதீய சதகம் :


ஆட்கொண்டருளே என்று கோரினவர் இன்று அடிமைத் தொழில் பூண்டாயே என்று மாதவ மானவரான தன்நெஞ்சைக் கொண்டாடுகிறார் ஆழ்வார்


எவ்வுள் கிடந்த எம்பெருமானின் பரத்வ சௌலப்யாதிகளை ராமாவதாரத்தையும் கிருஷ்ணாவதாரத்தையும் கொண்டு பாட்டு தோறும் நிரூபிக்கிறார் ஆழ்வார்.  


பர (கஜேந்திர வரதன்) ,  வியூக (மன்னாதான்) , விபவ (சக்ரவர்த்தி திருமகன்) , அந்தர்யாமி (அழகிய சிங்கன்) , அர்சை (வேங்கட கிருஷ்ணன்என ஐந்து நிலைகளுக்கான எம்பெருமான்களையும் மங்களாசாசனம் பண்ணுகிற ஒரே திவ்யதேசம் இந்த திருவல்லிக்கேணியாகிற அருளிச்செயல் மண்டபம்


நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என கோவலூர், குடந்தை , திருவாலிநறையூர், எம்பெருமான்களாகவே  திருநீர்மலையில் ஆழ்வார் அனுபவம்.


இருந்தமிழ் புலவரான  பூதத்தாழ்வார் அவதார ஸ்தலமாகிற கடன்மல்லையில்  பாகவத சேஷத்வம் இத்திருமொழியில் பரிமளிக்கிறது.


உன்மனத்தால் என்நினைந்திருந்தாய் என்று பிராபத்திக்கு உபாயம் அவன் நினைவு என்று பகவத் விபூதிக்கு கரைகை அவன் எத்னமாக நாமோ அதற்கு வல்லோம் ?


ஆழி, சங்கு,வில், வாளி, வாள், தண்டு, கேடயம் கொண்டு அநாஸ்ருதர்களையும் , ஒண்மலர் கொண்டு ஆஸ்ருதர்களையும் தோற்பிக்கும் அஷ்டபுய அகரத்தான் .


பல்லவன் மல்லையர் கோன்  பணித்த பரமேச்சுர விண்ணகரம் என்று பகவத் சரிசாட்டியான  பாகவத பிரபாவம் 


ஆங்கரும்பி கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர்களான முதலாழ்வார்களுக்கு ஆரமுதமான பெருமாள் கோவல் இடைக்கழி ஆயன்


த்ருதீய சதகம் :


மாறன் பணித்த தமிழ் மறைக்கு ஆறங்கள் கூற அவதரித்தமை - பிரபந்த கர்த்தாவான வக்த்ரு வைலக்ஷண்யம்பெரிய திருமொழி என்று இதற்கு இருக்கிற பேரே இந்த பிரபந்தத்தினுடைய பெருமையை ஒருவாறு காட்டி விடுகிறது. பெரியனான நம்மாழ்வாருடைய நாலுவேத சாரமான 4 பிரபந்தங்களுக்கு அங்கமானபடியாலும் பெருமை இதற்கு. எல்லாவற்றைக் காட்டிலும் பர, வியூக, விபவங்கள் என்று எம்பெருமானுடைய 5 நிலைகளில் ஸர்வருக்கும் , ஸர்வோபஜீவ்யமாய் இருக்கிற அர்ச்சாவரத்தில் மண்டி - ராஜ குமாரர்களுக்கு உண்ணும்போது பிடிதோரும்  நெய்சேர்க்கு மாபோலே , அடிதோரும் அர்ச்சாவதார வைபவத்தைப் திருமங்கை ஆழ்வார் பாடுகையே இப்பிரபந்தத்துக்குப் பெருமை


மஹாவராஹ புடபத்ர லோசன : என்கிற வராஹ பெருமாள் , கருங்கடல் துயின்ற பெருமாள் மற்றும் தேவநாதப் பெருமாள் என்று மூவராகிய ஒருவன் தேவர், தானவர் என்று யாவர்க்கும் அத்வேஷம் ஒன்றே பற்றாசாக  அபயம் அளிப்பவன் கோயில், நடு நாட்டுத் திருப்பதிகளில் ஒன்றான திருவஹீந்திரபுரம்


இந்திரிய , தேஹ நிக்ரஹம் சாஸ்திரங்களில் விதித்திருக்க, அவை ஏதுமின்றி தில்லை திருச்சித்ரகூடமாகிற திவ்யதேசத்தை சென்று சேருகையே போதுமானது. அதுகொண்டு பிராப்தி பர்யந்தமாக  எம்பெருமான் ஒன்று பத்தாக்கி நோக்கிக் கொண்டு போவான் என்கிற ஆபிமுக்யம் சொல்லப்பட்டது.


பரோபதேசமாகச்  சென்றது கீழ் பத்துப்பாட்டுஇதில் அதே சித்திரகூடத்து எம்பருமானை வருவான் வருவான் என்று உற்சவமாக புறப்பாடு காண்கிற அழகை ஸ்வதஹா அதுபவிப்பதில் இழிக்கிறார்


4ஆம் திருமொழி. காழிச்சீராம விண்ணகரம். திருஞான சம்பந்தரோடு எதிர்த்து நாலுகவிப் பெருமாள் என்கிற விருதும் , வேலும் ஆழ்வார் பெற்ற திவ்யதேசம்

ஆசுகவி 

விஸ்தாரகவி 

மதுரகவி 

சித்திரகவி 

என்று பாடவல்ல பெருமாள் நம் நாலுகவிப் பெருமாளான திருமங்கை ஆழ்வார்


அடுத்து அவதார ஸ்தலமான திருவாலி  திருநகரி மங்களாசாசனம்தமான தன்மை, தோழி, தாய் பாசுரம் என்று 3 திருமொழிகளில். வந்துனது அடியேன் மனம் புகுந்தாய்! புகுந்ததற்பின் வணங்கும்  என் சித்தனைக்கினியாய் ! என்று பரகத ஸ்வீகாரமாய் விஷயீகரித்தமை பேசுகிறார் இதில். இப்படி இருவருமாய் அணியாலிக்கு புறப்பட்டுப் போன மகனைப் பற்றி தாய் பேச்சு 7 ஆம் பதிகம்


8 ஆம் திருமொழி -  தன்மனத்துக்கு உபதேசம் செய்முகமாக நமக்குமமாக மணிமாடக்கோயில் வணக்க்கு என்று உபதேசிக்கிறார் ஆழ்வார். சாஸ்திரைக ஸமதிகம்யன் -வேதாந்த விழுப்பொருளின்மேல் நின்ற நந்தா விளக்கு -ஸத்யம் = நந்தா  , ஜ்ஞானம் = விளக்கே! , அனந்தம் = அளதர்க்கரியாய்! என்கிறார் ஆழ்வார்


9 ஆம் திருமொழி - வைகுந்த  விண்ணகரம் - இயற்கை வர்ணனை. திவ்யதேசங்களில்  இருக்கிற சேதநாசேதனங்கள் அனைத்தும் உத்தேஸ்யம் என்னும் அர்த்தம் காட்டப்பட்டது


10 ஆம் திருமொழி - அரிமேய விண்ணகரம் - திருமகளும் மண்மகளும் இருப்பதாலும் திகழ 



சதுர்த்த சதகம் :


இதில் உள்ள பத்து திருமொழியால் பத்து திவ்யதேசங்களை மங்களாசானம் செய்கிறார் என்பது இந்த பத்துக்கான சிறப்பு. .  ஏகாதச ருத்ரர்கள் என்று சிவனுக்கு  11 ரூபங்கள் போல, அவன்தானும் தனக்கு பிரம்மா கொடுத்த சாபம் விலக, இங்கே  அஸ்வமேதயாகம் செய்து சாபம் நீங்கியதோடு வரம் கொடுத்த திருமாலையும் 11 மூர்த்தியாக சேவை சாதிக்கும்படி பிரார்த்தித்தான். அப்படி தேவன் திருமால்  எழுந்தருளிய 11 திவ்யதிசங்களில் 3 திவ்யதேசங்களை 3 ஆம் பத்திலும் , மீதமுள்ள 8 திவ்விய தேசங்களை இந்த 4 ஆம் பத்தில் முதலில் மங்ககளாசாஸனம் செய்து, இன்னும் 


திருத்தேவனார்தொகை -> வசிஷ்டர் வேண்டுதலுக்கு இணங்க பெரிய பிராட்டியாரை கல்யாணசெய்த  கோலத்தில்  மாதவனாக சேவை சாதித்த ஊர். அவனுடைய கல்யாணத்தைக் காண தேவர்களும் குழுமிய இடம் இது ஆதலால், தேவவனார் தொகை ஆயிற்று


திருவண் புருடோத்தமம் -> திருமங்கை ஆழ்வார் இந்த திவ்யதேசத்து எம்பெருமானின் புருஷோத்தமத்தையும், வள்ளன்மையும்  பரக்கப்பேசுகிறார்

அங்கையால் அடிமூன்றும் நீர் ஏற்று = கைக்கு அழகு வள்ளன்மை . தானம் கொடுத்தவன் வள்ளலா? வாங்கினவன் வள்ளலா? என்றால் தன்னை அழியமாறி  தேவர்களுக்காக சென்றிரந்து வள்ளன்மை அல்லவே ? முகில் வண்ணன் அல்லவோ அவன்

அயன் அலர்கொண்டு தொழுதேத்த = ஒருவன் நிமிர்த்த திருவடியை விளக்கி ஸ்ரீபாததீர்த்தத்தை 

கங்கை போதர கால் நிமிர்த்த = கங்கை எனப் பெருகச் செய்ய  சிவன் திருமுடியில் ஏற்றான் என்றால் மூவரில் முதல்வன்  புருஷோத்தமன் யார் என்பது சொல்லாமலே விளங்கும் அன்றோ?  


செம்பொன்செய் கோயில் -> கீழ் பதிகத்தில் பெருமானை அருளாளன் என்றார் ஆழ்வார். 4இப்பதிகத்தில் அவனை பேரருளாளன் என்று விளிக்கிறார். அதற்கடி அவனருகில் உள்ள பெரிய பிராட்டியும், பூமிப்பிராட்டியும் என்கிறார். குற்றம் செய்யாதவர் உலகத்தில் யார் என்று பெரியபிராட்டி க்ஷ்மிப்பிக்கச் சொல்ல, பூமிப் பிராட்டி குற்றமா? யாரிடத்தில் என்று காணாக்கனண் வைக்கச் சொல்லும் ஒரு மிதுன விசேஷமன்றோ இவர்கள்.

பேரணிந்து உலகத்தவர் தொழுதேத்தும் பேரருளாளன் எம்பெருமான் 

வாரணி முலையாள் மலர்மகளோடு மண்மகளும் உடன்நிற்ப  

சீரணி நாங்கை நன்நடுவுள் - என்பதாக திருநாங்கூர் திவ்யதேசங்களில், இடத்தைப் பார்க்க நடுவான திவ்யதேசம் என்பதோடு மட்டும் அல்லாமல் பாசுர அமைப்பிலும் 11 திவ்ய தேசங்களுள் நடுவாக 6 வது திவ்யதேசமாக பதிகம் பெற்ற திருத்தலமாகும்  இது. இந்த திவ்யதேசத்துக்கு தேவப்பெருமாள் படி.திருவேங்கடமுடையான் படி. திருவரங்கன் படி என்று திவ்யதேசங்களுள் தலைமை படித்தனம் சொல்லுவது உண்டு. ராமபிரான் ராவண வதம் முடித்து அயோத்தி திரும்பிய பிறகு தீர்த்த  யாத்திரையாக இங்கு வந்து, தனக்கு ஏற்பட்ட ப்ரஹ்மஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொள்ள அஸ்வமேதயாகம் செய்து கோ-பிரசவம் என்கிற ஒரு கர்மாவை செய்து பிராயச்சித்தம் தேடிக் கொண்டதாக வரலாறு. கோ-பிரசவமாவது தங்கத்தால் ஆன பசுவை வடித்து அதன் வயிற்றில் 4 நாள் வாசம் இருந்து வெளிவந்து பிறகு அதனை திருட நேத்ரர் என்கிற முனிவருக்கு தானமாக வழங்கினார் என்று சொல்லப்படுவதால் திருவரங்கத்தோடு ஒப்புமை. தவிர செம்பொன் அரங்கர் என்ற பெருமாள் திருநாமத்தால் திருவரங்கம் பெரிய கோயிலோடு சம்பந்தம்.

பேரருளாளன் என்று இவ்வெம்பெருமானை ஆழ்வார் விளித்ததால் பெருமாள் கோயிலோடும் சம்பந்தம்

மின்திகழ்க்குடுமி வேங்கடம் மேவிய வேதநல் விளக்கு என்று  திருவேங்கடமுடையானொடும் ஒப்புமை உண்டு என்பதால்

இவெம்பெருமான் மூவராய ஒருவர் என்பதில் தட்டில்லை


திருத்தெற்றியம்பலம் -> தெற்றிஅம்பலம் = மேட்டிடம். திருவான பெரிய பிராட்டிக்கு ரங்கம் . சூரிய, சந்திரர்களுடிய பயத்தை . து. பாற்கடலைக் கடைந்து கிடைத்த அமுதத்தை மோகினி அவதாரம் எடுத்து தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் பங்கிடும்போது , ஒரு அசுரன் தேவ கோஷ்டியில் அமர்ந்து அமுதத்தைப் பெற, அதனை சூரிய சந்திரர்கள் காட்டிக்கொடுத்ததால், பகவான் அந்த அசுரனின் தலையைத் தட்ட தலை வேறாக, முண்டம் வேறாக ராகு, கேது என்று ஆனார்கள். காட்டிக்கொடுத்த குற்றத்துக்காக, ராகு, கேது  சூரிய , சந்திரர்களை, கிரகணம் வாயிலாக பீடிக்க , அந்த பயத்தை விலகிய ஊர். இவ்வெம்பெருமானே ஹிராணியாக்ஷனை முடிக்க வராகனாக அவதரித்தான் என்று ஆழ்வார் அனுபவம்


திருமணிக்கூட்டம் -> ஆழ்வார் கஜேந்திர வரதனாக இத்திவ்ய தேசத்து எம்பெருமானை அனுபவிக்கிறார். நல்குரவும், செல்வமும் நரகும் சுவர்க்கமுமாய் என்கிற நம்மாழ்வார் அருளிய திருவாயமொழியினை அடியொற்றி  எம்பெருமானுடைய விருத்த விபூதி விசேஷணத்தை பாவமும் அறமும் இன்பமும் துன்பமும் என்று தொடங்கும்  பாசுரத்தில் அவர் விரித்துச் சொன்னதை இவர் சுருக்கியும், அவர் யாம் மடலூர்தும் என்று சுருக்கிச் சொன்னதை இரண்டு தனிப் பிரபந்தமாகவே, சிறிய திருமடல், பெரிய திருமடல் என்று விரித்துச் சொன்னமையும் இவ்விறு வாழ்வர்களுக்குமான அங்காங்கி பாவம் மாறன் மறைப்பொருளுக்கு ஆறங்கம் கூற அவதரித்த வீறுடைய கார்த்திகையில் கார்த்திகை நாள் அவதரித்த பெருமையும் வெளிப்படுகிறது


காவளம்பாடி -> இந்த திவ்ய தேசத்தில் திருமங்கை ஆழ்வார் சரணாகதியை அனுஷ்டிக்கிறார். இதற்கு முன்னமே நைமிசாரண்யம், திருவேங்கடம் ஆகிய திவ்ய தேசங்களில் சரணாகதியை அனுஷ்டித்த இவர் இவ்விடத்திலும் நாகத்தின் நடுக்கம் தீர்த்த காவளம்பாடி மேய கண்ணனே களைகண்  நீயே என்று கஜேந்திர விருத்தாந்தத்தை உதாரணம் காட்டி சரணாகதியை அனுஷ்டிக்கிறார். ஸக்ருத் ஏவ என்று சொல்லி இருக்கிற சரணாகதியை இப்படிப் பலமுறை பண்ணலாமா? என்றால், வழியல்லா வழியிலாவது உடனே பெற வேண்டும் என்கிற ஆழ்வாருக் குண்டான ஆதுராதிசயத்தின் வெளிப்பாடுதான் இது. மேலும் இந்த பதிகத்தில் இந்திரனுக்காக நரகாசுரனைக்கொன்ற விருத்தாந்தத்தில், பாரிஜாத விருக்ஷத்தை ஸத்யபாமா நியமிக்க - ஏவிளம் கன்னிக்காக இத்திரர்கோனை செற்று காவளம் அடிதிறுத்து பச்சேறு கற்பகத்தை மாதர்க்காய் என்று அந்த மரத்தை தன்னுடிய தேவியின் புழக்கடையில் நட்டத்தும், தவறு செய்த இந்திரன் அனுதாபப் பட்டு தன்னுடைய தேவலோகத்தில் உள்ள சோலையிப் போன்று பூலோகத்திலும் ஒரு சோலையை அமைத்தானாம். அங்கே கோபாலனாக கண்ணன் அவனுக்கு சேவை சாதித்த இடம்தான் புரந்தரன் செய்த சோலை காவளம்பாடி என்று இந்த திவ்ய தேசத்து ஸ்தலபுராணமும் சொல்லப்பட்டது. இப்படி ஆழ்வார் செய்த சரணாகதி ஸபலமாகாது போக அடுத்து மீண்டும் 


திருவெள்ளக் குளம் -> திருவெள்ளக் குளத்துள் அண்ணா! அடியேன் இடரைக் காளையாயே என்று அண்ணன் கோயில் என்று சொல்லப்படுகிற இந்த திவ்யதேசத்து எம்பெருமாநான ஸ்ரீநிவாஸனிடம் மீண்டும் அடக்கலம் புகுகிறார். குமுதவல்லி நாச்சியாரைக் ஆழ்வார் கண்டெடுக்கப்பெற்ற திவயதேசமும் இதுதான். அவளாலேதான் நமக்கு ஆழ்வார் திருமங்கை ஆழ்வார் ஆனார். வேடார் திருவேங்கடம் மேய விளக்கு என்று  திருவேங்கடவனாகவே இந்த திவ்ய தேசத்துப் பெருமாளை ஆழ்வார் மங்களாசாசனம் செய்தபடியால் இவர் திருவேங்கடவனுக்கு அண்ணன் என்றே கருதப்படுகிறார். கண்ணார் கடல்சூழ் என்று இவ்விரண்டூ திவ்விய தேசங்களுக்கான  இரண்டு பதிகங்களும் தொடங்குவது இன்னும் ஒரு ஒற்றுமை

சென்னார் வணங்கும் என்று இங்கு சென்றவர்கள், அவன் ராவணனாக இருந்தாலும் வணங்கும்படியான தோற்றத்தோடு கூடிய எம்பெருமான் என்பதை துரியோதனன் அவையில் கண்ணனெம்பெருமான் தூது சென்றபோது யாரும் எழுந்து அவனுக்கு மரியாதை செய்யக் கூடாது என்று துரியோதனனின் ஆணையை மீறி ஸ்வசத்தை இழந்தவர்களாக அனைவரும், துரியோதனன் உள்ளிட்ட அனைவரும் எழுந்திருந்து வரவேற்றமைப் போல சென்னார் வணங்கும் திருத்தலம் இது


கலியன் சொன்னமாலை வல்லவர் என வல்லவர் வானவர்தாமே என்று பலஸ்ருதி சொல்லப்பட்டது. இந்த திருப்பதிகத்தை கற்றவரோடு, இதனை இவன் நன்றாக அதிகரித்துளான் என்று கேட்டு வாயாற சொலுபர்வர்களுக்குமாக இரண்டு பேருக்கும் மோக்ஷம் அல்லது நித்ய முக்தர்களோடு ஒரு கோர்வை ஆவர் என்று அதிகரித்தவனுக்கும், அதிகரித்தவனை சிலாகித்த வனுக்கும் பேறு சொல்லப்பட்டது


பார்த்தன் பள்ளி -> இவ்வளவு சொல்லியும் தன்னுடைய பிறவித் துயர் போகவில்லையே என்ற ஏக்கத்தில் ஆண்தன்மை போய் பெண் பாவத்தில் பரகால நாயகியாக பாசுரம் இவ்விடத்து. அதுவும் பெண்ணான தான் பேசவும் சக்தி அற்றவளாய் கிடக்க தாய் பேசுவதாக சொன்ன பதிகம்பவளவாயால் என்மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே - இவளுடைய ஆதார சோபையைக் கண்டு அவெம்பெருமான வாய்புலர்த்த வேண்டி இருக்க, இவள் வாய் புலர்த்துகிறாளே என்று தாயின் வருத்தம்

கட்க புஷ்காரணிக் கரையில் அர்ஜுனனுக்காக பார்த்த சாரதியாக சேவை சாதித்த இடம். தீர்த்த யாத்திரையாக வந்த அர்ஜுனன் தாக்கத்தால் அகத்தியர் ஆஸ்ரமம் கண்டு நீர் வேண்ட, அவர் ஒரு வாலைக் கொடுத்து நிலத்தை கீறி தாக்கத்தை தீர்த்துக் கொள்ளச் சொன்னார். அவ்வாறு பூமியைக் கீறி வந்த புஷ்காரனிதான் கட்க புஷ்கரணி . இங்கு அர்ஜுனன் கத்தியோடு காட்சி தருவதும் இதற்கு ஒரு காரணம்.

இத்தோடு நாங்கூர் திவ்யதேசங்களின் மங்களாசாசனம் முடிகிறது. இங்குள்ள வைதிகர்கள் எல்லாம் இத்திவயதேசத்து எம்பெருமான்களைப் போலவே கீர்த்தி மூர்த்தியானவர்கள். 4000 குடும்பங்கள் வைத்தியர்கள் இருந்த திவயதேசமென்று சொல்லபப்டுகிறது

நானாவகை நல்லவர் மல்கிய நாங்கூர் = இவர்களுக்குண்டான நன்மைகளாவன ஜ்ஞான பக்தி வைராக்கியம். ஜாதியந்தணர்களாய், அனுஷ்ட்டான பிரதானர்களாய் இருப்பவர்கள்இவர்கள்  

தெளிந்த நான்மறையோர் = எம்பெருமான்தான் உபாயம், எம்பெருமான்தான் உபேயம். அவனே ரக்ஷகன் என்கிற தெளிவு.

நலன்புடை வேதியர் = ஜானத்தோடு, பக்தியும் உடையவர். நல்லன்பாவது பரம பக்தி.

மூன்று வெந்தழல் ஆறங்கம் வல்லவர் = ஞான, பக்தியோடு அனுஷ்டானமும் உள்ளவர்கள். அத்தோடு இவர்கள் மங்களாசாசன தத்பரர்கள் என்பதற்கு இந்த நாங்க்கூர்மேல் படையெடுத்து வரும் அரசர்களை ஓடுவித்தவர்கள் என்பதை 

மாவரும்திண்படை மன்னர் வென்னிக்கொள்வார் மன்னு நாங்கூர் = குதிரைப் படையோடு போர் தொடுக்க வந்த மாற்றரசர்களை வெல்லுகிற வலைமை கொண்ட என்கிறார் ஆழ்வார்.    

ஒண்திறல் தென்னன் ஓட வடவரை தோற்றம் கண்ட திண்திறல் = ஆக்கிரமிக்க வந்த பாண்டிய மன்னனை ஓடவிட்ட திறமை என இங்குள்ள வைதிகர்கள் வீரம், வலிமை எல்லாம் பேசி 

திடமொழி அந்தணர் = பிரம்மா வரம் கொடுத்தால் அவனாலும் மீட்கப் போகாது. அதுபோல திடமான வாக் வைபவத்தை உடைய அந்தணர்கள் என்று பலவாறு எம்பெருமானுக்கு ஒத்த பெருமையோடு வர்ணனம் செய்கிறார் ஆழ்வார்.  


திருவிந்தளூர் -> பார்த்தன் பள்ளியில் மயங்கிக் கிடக்கிற ஆழ்வாரை, இந்தளூர் எம்பெருமான் நீர் கேட்டதெல்லாம் நாம் கொடுக்கிறோம் நம்மிடத்தில் வாரும் என்று சொல்லி அழைக்க அங்கே சென்ற ஆழ்வாருக்கு கிடைத்த பகுமானம் ஏமாற்றம்

ஆழ்வார் அங்கு சென்றபோது கோபுரவாசல் அடைத்து, திருக்காப்பு சேர்த்திருக்க கோபம் வந்த ஆழ்வார் ஒரு பெண் காதலனுடன்  ஊட்டுவதுபோல ஆணான தன்மையிலே எம்பெருமானோடு ஊடுகிறார் ஆழ்வார் இப்பதிகத்தில்

மின்னிடை மடவார் திருவாயமொழியில் நம்மாழ்வார் ஊடுவது போலாவவும்;

ஏர்மலர் குழலார் பதிகத்தில் குலசேகராழ்வார் ஊட்டுவதுபோலவுமான பதிகம் இது. மேலே 

காதில் கடிப்பிட்டு கலிங்கம் உடுத்து என்கிற பதிகத்தில் இவரே ஊடுதல் செய்கிறார். ஆனால் இப்பதிகத்துக்குச் சிறப்பு ஆணான தன்மையில் எம்பெருமான் பேரில் சீற்றத்தோடு ஊடுகிறார் எப்படி என்றால்  

உம்மைத் தொழுதோம் நுந்தம் பணிசெய்திருக்கும் நும்மடியோம் 

இம்மைக்கின்பம் பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே! - என்று வாழ்த்த வந்த வாயால் வையத்தொடங்குகிறர் ஆழ்வார்

சொல்லாது ஒழியகில்லேன் அறிந்த சொல்லில் நும்மடியார் 

எல்லோரோடும் ஓக்க எண்ணி இருந்தீர் அடியேனை - என்று 10 மாதம் பிரிந்து தரித்து இருக்கக் கூடிய பெரிய பிராட்டியைப் போலேயோ? அல்லது அனுபவம் இல்லையென்றால் துடிப்பதும், அனுபவம் உண்டானால் ஆறி இருக்கவும் வல்ல நம்மாழ்வாரிப் போலாவோ எண்ணி இருந்தீர் எம்மை? பிரிந்த்தாலும் கூடினாலும் தரிக்கமாட்டாத சௌகுமாரியத்தை உடையவர் அன்றோ இந்த பரகால கவி ? ஈதே அறியீர் = பிரிந்தபோது ஆற்றாமை. கூடினபோது இவருடைய மிருதுஸ்வபாவம் காரணமாக தேற்றும்படியான சௌகுமார்யம் இவருடையது. இதை அறிந்து காரியம் செய்ய வேண்டா

வாசிவல்லீர் இந்தளூரீர்! வாழ்ந்தேபோம் நீரே = ஸர்வஜ்ஞன் என்கிற பட்டத்தை வைத்துக் கொண்டு இதனை அறிந்தீர் இல்லை. உம் உடம்பை நீரே மோந்துபார்த்துக் கொண்டு வாழ்ந்துபோம் என்று வசை பாடுகிறார் ஆழ்வார். அல்லது உம்முடைய உடம்பை நித்ய சூரிகளுக்கு மட்டும்தான் கொடுப்பீரோ, அடியேனைப் போன்ற ஸம்சாரிகளுக்கு கொடுக்க மாட்டீரோவாசி வல்லீர் = நன்றாகவே பாரபக்ஷம் பார்க்கிறீர் போம் என்று கோபித்துக் கொண்டு 

திருவெள்ளியங்குடி -> எம்மருமானிடத்தில் சேவையை வேண்டி அங்கு செல்கிறார். வெள்ளி = சுக்ரன். எம்பெருமானுடைய வாமன அவதாரத்தின்போது கண்ணை இழுந்த சுக்கிரன், இங்கு தவம் புரிந்து மீண்டும் கண்பார்வையைப் பெற்றான்  என்கிறது. அவனே கொள்ளவில்லை ராமனாக இங்கு காட்சி கொடுக்கிறான் .இந்த பதிகத்தை அப்யசித்தவர்கள் மோக்ஷத்தையோ, பகவத் கைங்கர்யத்தையோ பெறுவார்கள் என்று சொல்லாது 

ஆள்வர் இக்குரை கடல் உலகே என்று ஐஸ்வர்ய பிராப்தியைச் சொன்னது   

பகவத், பாகவத கைங்கர்யத்துக்கு உடலாக செல்வத்தை பெற்று செலவழிப்பது கூடும். அல்லது ஐச்வர்யத்தை வேண்டி வந்தால், பிறகு சிறிது சிறிதே இதில் சொல்லப்பட்ட விஷயங்களை புரிந்து பகவத் பக்கத்தி காமத்துக்கு வருவார்கள் என்று எண்ணி சொல்லவுமாம்


பஞ்சமோ சதகம் :


பெரிய திருமொழி சாரம் என்றால் அது திருமந்த்ரார்த்தம்தான். நான் கண்டு கொண்டேன் நமோ நாராயணா என்னும் நாமம் என்று தொடங்கி திருநறையூர் நம்பியடம் திருவிலச்சினையும், திருக்கண்ணபுரம் சௌரிராஜனிடம் மந்த்ரோபதேசமும்  பெற்றவர் இவ்வாழ்வார். அதற்குச் சேர பெரியகோயில் என்கிற திருவரங்கத்துக்கு 50 பாசுரம் சமர்ப்பித்தார் என்றால், ஆசார்யனுக்கு இரட்டிப்பு சம்பாவனை என்ற கணக்கிலே இந்த இரண்டு திவ்ய தேசத்துக்கும் 100, 100, பாசுரங்கள் சமர்ப்பித்தார்.  


திருமொழிக்குண்டான ஏற்றமே ஆழ்வார் தம்முடைய பாசுரங்களில் அநேகமாக முதல் 2 அடிகளாலே குண விசிஷ்டனான எம்பெருமான் பெருமையைச் சொல்லி மற்ற இரண்டு அடிகளிலே இயற்கை வர்ணனைகள் வரும். குணங்கள் என்ன, விபூத்யதிசயம் என்ன எல்லாமே நார சப்தார்த்தம் தான். அயன சப்தார்த்தம் ஆங்காங்கே சொல்லப்படுகின்றது. இது செய்வினை , செயப்பாட்டு வினை - தத்புருஷ ஸமாசம் , பஹுவ்ரீஹி ஸமாசம் என்று வடமொழியில் சொல்லப்படுகிறது .

எழுவாய் சொல்லான Subject க்கு முக்கியத்துவம் தத்புருஷ ஸமாசத்தில். பயன் நிலை சொல்லான Predicate க்கு முக்கியத்வம் பஹுவ்ரீஹி ஸமாசத்தில் . நாராணாம் அயனம் - நாரங்களுக்கு இருப்பிடம் பகவான் என்பது தத்புருஷ ஸமாசம். இதற்கு உதாரணம் 

பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் . . . . என்று தொடங்கும் பெரிய திருமொழி (5-7-1)

நாரஸ்ய அயனம் - நாரங்களைத் தனக்கு இருப்பிடமாக கொண்டவன் பகவான் என்பது பஹுவ்ரீஹி ஸமாசம்

இதற்கு உதாரணம் 

சிந்தனையைத் தவநெறியைத் திருமாலை பிரியாது 

வந்து எனது மனத்திருந்த வடமலையை (பெரிய திருமொழி 5-6-7)

என்பதான பாசுரங்களில் காட்டியுள்ளார்

நாராயண ஸப்தத்துக்கு எல்லாவிதமான உறவுமுறையும் அவனே -ஸர்வ வித பந்து என்கிற பொருளும் சொல்லப்படுகிறது

இதனை ஆழ்வார் பல இடங்களில் காட்டியுள்ளார். உதாரணத்துக்கு ஏழை ஏதலன் பதிகத்தில் கடைசீ பாசுரம் 

எந்தையை நெடுமாலை நினைந்த பாடல் பத்திவை (பெரிய திருமொழி 5-8-10)  - எந்றவிடத்திலே நோக்குக

இனி ஆய பதார்த்தமான கைங்கர்ய பிரார்த்தனையைத் திருவெள்ளறைப் பதிகத்தில் (பெரிய திருமொழி 5-3-1)

நின்குறை கழல் தொழுவதோர் வகை எனக்கு அருள் புரியே அருள் புரியே என்று பலகால் பிரார்திக்கிறார்

இந்த 5 ஆம் பத்து பெரிய திருமொழியில் நாராயண சப்தம் வியக்தமாக சொல்லப்படாவிட்டாலும்

வலம்தரும் மற்றும் தந்திடும், பெற்ற தாயினும் ஆயின செய்யும் என்று தொடக்கத்தில் காட்டினத்தை அடியொற்றி

வளங்கொள் மந்திரம் (பெரிய திருமொழி 5-8-9) என்று குறிப்பது நாராயண நாமத்தையே என்பதில் தட்டில்லை.


இந்த 5 ஆம் பத்து 8 ஆம் திருமொழி முழுவதும் திருமந்திரத்துக்கு விவரணமான துவாயார்த்தம் சொல்லுகிறது. அதாவது துவயத்தினுடைய பூர்வ கண்டார்த்தமான பிரபதனத்தைச் சொல்லுகிறது

நின் அடியிணை அடைந்தேன் அணிபொழில் திருவரங்கத்தம்மானே (5-8-1)

ஸ்ரீமந் நாராயண = நின் 

சரணௌ  = அடியிணை 

சரணம் பிரபத்யே = அடைந்தேன் 


உலகமுண்ட பெருவாயா (திருவாயமொழி 6-10-1) பதிகத்தில் நம்மாழ்வார் 11 பாசுரத்தில் திருவடியைப் பற்றி பிரஸ்தாபம் போலே , இந்த ஏழை ஏதிலன் என்கிற பதிகத்தில் திருமங்கை ஆழ்வார் திருவடியை 9 பாசுரங்களிலும் ஒற்றிச் சொல்லி பற்றுகிறேன் என்கிறார். உத்தர கண்டார்தத்தை திருவெள்ளறைப் பதிகத்தில் கண்டுகொள்வது


திருவிந்தளூரில் இருந்து ஏமாற்றத்துடன் புறப்பட்ட ஆழ்வார் திருவெள்ளியங்குடிக்குச் செல்ல அங்கு சயனித்துக்கிடக்கிற எம்பெருமான் சேவைக்கொடுத்தானே ஒழிய, அர்ச்சாசமாதியைக் குலைத்துக் கொண்டு வாய்திறந்து வார்த்தையாட வில்லையே என்ற ஏக்கத்துடன் அடுத்த திவ்யதேசத்துக்குச் செல்கிறார்


திருப்புள்ளம்பூதங்குடி -> இங்குள்ள எம்பெருமான் தோளை பற்றின பிராட்டிமார்க்கும், தாளைப் பற்றின நமக்கும் ஓக்க அருளுவான் என்று நினைத்து  இங்கு வந்து இங்குள்ள 

அறிவதரியான் அனைத்துலகுமுடையான் என்னை ஆள்வான் 

குறியமாணுருவாய கூத்தன்  (பெரிய திருமொழி - 5-1-1)

என்கிற பதிகம் பாடுகிறார். அறிவதரியான் என்றால் ஒருசிலரால் அறியமுடியாதா? யாருமே அறியமுடியாதா? யாருமே அறியமுடியாது என்றால் ஆகாசத் தாமரை. முயல் கொம்பு இதுபோல இல்லாத வஸ்து போலேயா? என்பது இல்லை. யாராலும் தங்கள் முயற்சியால்  அறியமுடியாது. அவன் அருள் இருந்தால் அறியமுடியும் என்று பொருள். அனைத்துலகுக்கும் ஸ்வாமி . எனக்கும் ஸ்வாமி என்கிறார்


கூடலூர் -> தான்தன் பெருமை அறியார் தூது வேந்தர்க்காய வேந்தன்  = யஸ் ஸர்வஜ்ஞ : ஸர்வ விது என்பவனுக்கு தன்னைப்பற்றித்  தெரியாதா? என்றால் அளவுபடாத வஸ்துவை அறிவது அரிது. அவன் அளவிட முடியாதவன் என்பதையே இப்படிச் சொல்லுகிறதுஅப்படி அளவுபடாத பெருமை அவனுக்கு எதுதான் என்றால் 

மத்தப் பரதரம் அஸ்தி கிஞ்சித் தனஞ்ஜயா 

மயி இதம் ப்ரோக்தம் சூத்ரே மணிகணா இவ 

என்கிற பெருமையோ என்றால் இல்லை.

ஆஸ்ருதர்களான  பாண்டவர்களுக்காக தூது நடந்ததுதான் என்பதேகீழ் பதிகத்தில் இந்திரனுக்காக தன்னை அழியமாறி மஹாபலியிடம் யாசிக்க சென்ற விருத்தாந்தம் சொல்லப்பட்டது. இப்படி அடியார்கள் இட்ட வழக்காக ஏவிப்பணியிட வல்லனாய் தாழவிட்டுப் பரிமாறுகையையே தனக்கு பெருமையாக நினைக்கிறான்.  


திருவெள்ளறை -> 

வாம்பரியுக மன்னர்தம் உயிர்செக ஐவர்கட்க்கு அரசளித்த 

காம்பினார் திருவேங்கடப் பொருப்ப

நின்காதலை அருள் எனக்கு என்கிற வார்த்தைப்பாடுதான் எம்பெருமானார் தன்னுடைய ஸ்ரீபாஷ்யத்துக்கு ஸாதித்த 

ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே ! பவது மம பரஸ்மிந்  சேமுஷி பக்கத்தி ரூபா - என்கிற மங்கள ஸ்லோகத்திற்கு வித்தாயிற்று  எனலாம்


திருவரங்கம் -> உந்திமேல் நான்முனைப் படைத்தான்  = ஜகத் காரணத்வம்

வையம் உண்டு ஆலிலை மேவும் மாயன் = ரக்ஷகத்வம். இவை இரண்டும் பிரணவத்தில் உள்ள அகாரார்த்தம்

ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறுகுறளாய் 

தானுமாய தரணித் தலைவன்  = இங்கு தானுமாய் என்பதற்கு விவரணம் 8 ஆம் பத்து 

மீனோடாமை அரி குறளாய் முன்னும் ராமனாய் தானாய் பின்னும் இராமனாய் என்று சக்ரவர்த்தித் திருமகன்தான் மற்ற எல்லா அவதாரங்களையும் செய்தான் என்கிறார் ஆழ்வார். அந்த சக்ரவர்த்தித் திருமகன்தான் இங்கு நம்பெருமாளாக சேவை சாதிக்கிறார் அன்றோ

வெருவாதாள்  வாய்வெருவி பதிகம்திருவாயமொழியில் எப்படி கங்குலும் பகலும் பாசுரமோ அதுபோலே இந்த வெருவதாள் வாய்வெருவி பதிகம் தாய்ப்பாசுரமாகச் செல்லுகிறது. ஞானத்தில் தன் பேச்சுபிரேமத்திலே பெண் பேச்சு என்பதற்குச் சேர விஸ்லேஷ தசையில் பெண்ணான தனிமையிலே பாசுரம். அதுவும் தன் தசையை தன் வாயால் சொல்லவும் சமன் அன்னிக்கே திருத்தாயார் பாசுரமாக அருளிச் செய்கிறார்

கங்குலும் பகலும் - வெருவதாள் வாய்வெருவி இரண்டு பதிகத்துக்கும் ஒற்றுமையும் உண்டு, வேற்றுமையும் உண்டு

இரண்டுமே திருவரங்கத்து எம்பெருமானைப் பற்றியன

இரண்டுமே தாய் பாசுரங்கள். இவை ஒற்றுமை என்றால் வித்யாசம் 

பராங்குச நாயகியின் தாயார் இவள்திறத்து என் செய்கின்றாயே? என்று சில கேள்விகளைக் கேட்கிறாள் அவ்விடத்து. ஆனால் பரகால நாயகியின் தாயார் அப்படியெல்லாம் கேள்விகள் ஏதும் கேட்பதில்லை

நீல மலர்க்கண் மடவாள் நிறை அழிவை எங்கனம் நான் செப்புவனே? என்மகளைச் செய்தனகள் அம்மனைமீர்! அறிகிலேனே  - என்பதாக வருத்தப்படுகிறாள்அத்தனை. இப்படி எம்பெருமான் திருநாமத்தைச் பெண்ணானவள் சொல்லிச் சொல்லி வாய்புலர்த்தியமையை தாயார் அனுபாஷித்த படியால், உணர்த்தி பெற்று மேலும் அந்த பகவதனுபவத்தில் இழிகிறாள். அடுத்து 

கைமான மழைகளிற்றை = எம்பெருமானை யானையாகவே பல இடங்களில் ஆழ்வார் சொல்லி இருக்கிறார். திருநெடுந்தாண்டகத்திலும் 

தென்னானாய் வடவானாய் குடபாலானாய் குணபால மதயானாய் (தி நெ தா -10)

தெற்கே அழகர் கோயில் 

வடக்கே திருவேங்கடம் 

மேற்கே திருவரங்கம் 

கிழக்கே திருக்கண்ணபுரம் 

என்பதாக சொன்ன அளவிலே, எம்பெருமானார் பெரிய முதலியாரான  நாதமுனிகள் அவதரித்த வீர நாராயண புரத்துக்கு பாசுரம் இல்லாத குறை தீர , திருவாலி திரு நகரிக்கு கிழக்கேயான காட்டுமன்னார் கோயில் மன்னனாருக்கு இதனை ஸமர்பித்தார் என்கிற ஐதிஹ்யம் இவ்விடத்தில் காட்டப்படுகிறது . ஆனைக்கும் - எம்பெருமானுக்கு பல ஒற்றுமைகளைச்  சொல்லலாம்.

யானையை எப்போது பார்த்தாலும்  அபூர்வமாய் தோற்றுவதுபோல, எம்பெருமானும் அப்போதைக்கு அப்போது ஆராவதுமே.

யானை காலை பிடித்தால் அதன் கழுத்தில் அமரலாம். எம்பெருமான் காலில் விழுந்தால், அவன் குறுமாமணிமார்பில் கௌதுப்பமாய் அமரலாம்.

காவிரியில் நீராடி எழுந்த யானை கரையில் உள்ள மண்ணை தலையில் வாரி போட்டுக்கொள்ளுமா போல , வடமொழி உபநிஷத்துக்களாலும், திராவிட வேதமாகிற திவ்யபிரபந்தங்களால் புனித நீராடுமவன் , அடியேன் போல்வாரின் ஈன சொற்களாலும், புன்கவிதைகளாலும் மலினமாகிக் கொள்வதில் விருப்பமுடையன் போலும் நம்பெருமாள்

கடிகொள் பூம்பொழில் = கஜேந்திர வ்ருத்தாந்தம்

முடியும் வண்ணம் ஒர் முழுவலி முதலை = யானைக்கும், தனக்கும் சாப விமோச்சனம் பிராப்த்தமாகும் படியாக நீரிலே தனக்குண்டான பலத்தைக் கொண்டு 

கொடிய வாய் விலங்கு = ஆஸ்ருதனைப் புண்படுத்தியது எம்பெருமானையும் புண்படுத்தியது என்பது தோற்ற கொடிய வாய் 

கொண்ட சீற்றம் = கோபத்துக்கு அருள்பாடிட்டபடி. நிக்ரகம் என்பது எம்பெருமானுக்கு இயல்பானது அன்று. அதனை அவன்  சில சமயங்களில் ஏறிட்டுக் கொள்கிறான் என்பதை ஸ்ரீ ராமாயணத்தில் பெருமாள் சமுத்திர ராஜனிடத்தில் சரணாகதி செய்தபோது அவன் முகம் கொடாமல் காலம் தாழ்த்த, கோபம் ஆஹாரயத் தீவ்ரம் என்றாறிரே ரிஷியும்

ஒன்றுண்டுளதறிந்து அடியானேனும் வந்து அடியிணை அடைந்தேன் = அங்கு ஒரு முதலை. அடியனேன் இடத்தில் 5 முதலை. ஆபத்து அடியேனுக்கல்லவோ அதிகம். எனவே என்னையும் விரைந்து ரக்ஷிக்க வேண்டும் என்பதாக ஆழ்வார் முறையீடு இதிலே


திருப்பேர்நகர் - கோயிலடி அப்பக்குடத்தான் -> பையரவணையான் நாமம் பரவி நான் உய்ந்தவாறே - என்று அந்த எம்பெருமானுடைய நாமத்தின் பெருமையை பரக்கத் பேசுகிறார். கட்டிப் பொன் போலே எம்பெருமான் என்றால் பணிப்பொன் போலே அவன் திருநாமங்கள். நாமியைக் காட்டிலும் நாமத்துக்கு பிரபாவம் திரௌபதிக்கு ஆபத்திலே புடவை சுரந்தது திருநாமமிறே என்கிறவிடத்திலே கண்டு கொள்வது


நந்திபுர விண்ணகரம் - நாதன் கோயில் -> சந்தம் அழகிய பாடல்கள். நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே என்று தன் மனதுக்கு உபதேசிக்கிற பாசுருங்கள். இந்த திருமொழியை முறையில் பயில வல்ல அடியவர்கள் கொடுவினைகள் முழுமுதலகலுமே - என்பதாக ஒரு ஆச்சாரியனிடத்தில் குனிந்து பணிசெய்து கற்கவேண்டிய பனுவல். தற்காலத்தில் போல் தனக்குத்தான் ஆசாரியன் என்று புத்தகத்தை  வைத்துக்கொண்டோ,ஒலிநாடாக்களைக் கொண்டோ பயில்வது முறையாகாது என்பதைக் கோடிட்டுக் காட்டினாற்போலும் ஆழ்வார்.


ஷட்கம  சதகம் :


இந்த 6 ஆம் பத்தில் உள்ள  10 ஆம் திருமொழி ஈற்றுப் பாசுரத்தில்தான் ஆழ்வார் 

காவித் தடங்கண் மடவார் கேள்வன் கலியன் ஒலி மாலை  

மேவிச் சொல்ல வல்லார் பாவம் நில்லா வீயுமே (பெரிய திருமொழி (6-10-10)

என்று இந்த கவிதை தொகுப்புக்கான தலைப்பை தாமே எடுத்துக் கொடுத்தார் போலும் ?

இது இரண்டே திவ்யதேசங்களின் மங்களாசாசனம் அமையப் பெற்றது . திருவிண்ணகருக்கு 30 பாசுரங்களும் , திருநறையூருக்கு ஆழ்வார் பாடிய 100 பாசுரங்களில் 70 பாஸ்சுரங்கள் இந்த 6ஆம் பத்தில்தான் அமைந்துள்ளன.


திருவிண்ணகர் - ஒப்பிலியப்பன் -> ஆபாசமான விஷயாந்தர சுகங்களை உதறித்தள்ளுகிறார் ஆழ்வார். துர்கந்தாஸ்பதமான கூவத்தின் கரையிலே வசிப்பவர்களை நல்ல குடியிருப்பில் அமர்த்தினாலும் பொருந்தாது கூவத்தின் கரைக்கே திரும்புமா போலே , பகவத் விஷயத்திலே புகுற ஒட்டாது - ஸ்வ விஷயாஸ்ச போக்ய புத்தேர் ஜனனீம்என்ற கணக்கிலே தம்மிடத்திலே போக்யதா புத்தியை உண்டுபண்ணும் உலக வாழ்கையை  

ஆண்டாய்! உனைக்காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல் 

வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே ! (பெ.தி.மொ -6-1-1)

என்று பதிகம் முழுவதுமாக 9 பாசுரங்களிலேயும் யாசிக்கிறார் ஆழ்வார்.

முதலில் திருவிக்ரமனுடையஅபதானம்.

அடுத்து திருப்பாற்கடல் கடைந்து விண்ணவர் அமுதுண்ணஅமுதில் வரும் பெண்ணமுது உண்ட விருத்தாந்தம்

அடுத்து ருத்ரனுக்கு - அங்கு அழல்நிற அம்பதுவானவனே - என்று அவனுக்கு அந்தர்யாமியாக இருந்துதிரிபுரம் எரித்த வரலாறு.

அலைகடல் ஆலிலைத் வளர்ந்தவனே என்றும் 

ஓரெழுத்து ஓருருவானவனே - அகாராவை ஸர்வா வாக் என்று  அகார ஸப்த வாச்யனாய்ஸதேவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் என்றும் சிருஷ்டிக்கு ஆதியிலே எல்லாவற்றையும் தன்னுள்ளே வைத்து - துவிதீயம் என்று ஒருத்தனாக இருந்து ரக்ஷித்த வைபவம் 

நான்மறையாய், வேதமோதும் அந்தணர் ஆரழல் சந்தியின் வாய் இன்னிசையாய் , மாதர் கலவி வெருவி, சாதல் பிறத்தல் இவை காதல் செய்யாது உன்னைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல் வேண்டேன் மனை வாழ்க்கை என்றருளிச் செய்கிறார் இதில்

பரமாத்மனையோரக்த : விரக்த : அபரமாத்மாநி  என்பதற்குச் சேர,   அடுத்த தசகத்திலும் தான் இதுகாறும் இருந்த இருப்பைச் சொல்லி அதற்கு வருந்தி ஆர்வச்செற்ற்ம அவைதன்னை மனத்தகற்றி வெறுத்தேன் நின் அடைந்தேன் 

என்று திருவிண்ணகர் எம்பெருமான் இடத்தில் சரணாகதியை உத்தேசித்துப் பேசுகிறார் ஆழ்வார்.

இனி இத்தனைக் காலம் புறம்பே போனதற்கு இந்த மனதும், பிறவியும்தான் காரணம். அதனால் பெருமான்! திருமார்பா! சிறந்தேன் நின்னடிக்கே - என்று பிராட்டி சஹகாரத்தோடு சரணாகதியினைப் செய்கிறார் 2 வது பாசுரத்தில். இந்த பதிக்கத்துக்கு பலனாய் வானவர்தம் கொடிமாநகர் கூடுவரே - என்று பரமபத பிராப்தியைச் சொல்லிற்று.


ஸக்ருத் ஏவ பிரபந்னாய தவாஸ்மி இதீச யாசதே --  பகவத் வசனத்தில் 
ஸக்ருத் ஏவ என்றது ஒருமுறை  என்பதைக் காட்டிலும்  ''ஸஹசைவ'' = சடக்கென்று , சீக்கிரமாக என்று ஆழ்வான் நிர்வாஹம். 
அநாதி காலமாக ஸம்ஸரித்துப் போந்த இவன் , ஒரு ஜென்மம் எல்லாம் பிரபத்தியை அனுசந்தித்தால்தான்
''ஸக்ருத் '' என்கைக்குப் போரும். இது எம்பார் நிர்வாஹம் 
பகவத் ப்ரபாவத்தைப் பார்த்தால் ஒருகாலுக்குமேல் மிகை. பிராப்பிய ருசி ப்ராப்த்தி அளவும் அநுவர்த்திக்கும்  என்பது பட்டர் நிர்வாஹம்.  
பிரபத்தி -> கனிப்பழம் காம்பற்றாப் போலே இருக்கும் - பெரிய நம்பிகள்.  
அதாவது, பழம் பழுத்தால் காம்பை விட்டு சடக்கென பூமியில் விழுவதுபோல நிர்வேதம் பிறந்த உத்தர க்ஷணத்திலே , பெருமானைத் தவிர போக்கில்லை என்று அவன் திருவடிகளுக்கு வருகை பிரபத்தி (அ ) சரணாகதி.
திருநாரணன்தாள் காலம்பெற சிந்தித்துய்மினோ  
கூவிக்கொள்ளும் காலம் இன்னும் குறுகாதோ? 
என்று ஆழ்வார் பேசியபடி கால விச்சேபம் இல்லாமல் சடக்கென்று = ருசி பிறந்த வளவிலே. 
கால விளிம்பத்தால் ஸத்வம் தலை மடிய இதர விஷயங்களில் ருசி உண்டாகி இழந்தே போகலாம் அல்லவா?  அதனால் ஸக்ருத் = சஹசைவ = சடக்கென - என்றது.

கனி காம்பறுந்து கடைக்கு வந்து பிறகு கையில் வந்தால் அல்லவோ அதை உண்ண முடியும்? எனவே பழத்தை சாப்பிட காம்பறுகை காரணம் என்று நினைப்பிடுதல் போல  பிராப்திக்கு பிரபத்தி உபாயம் என்பதா? என்றால் அது 
ரேகா சமமாயிருக்கும் - என்று திருமாலை ஆண்டான் வார்த்தை. 
கர்மாதீனமாக அமைகிற வாழ்க்கையை கையில் இருக்கும் ரேகையைக் கொண்டு சொல்வதோடு ஒக்கும். சூரிய மேடு, சுக்கிர மேடு, ஆயுள் ரேகை இதனாலேயோ வாழ்கை  நடப்பது? இல்லை. ஆனாலும் அவைகளைக் கொண்டு  ஓரளவுக்கு வாழ்க்கையில் நடக்க விருப்பதைக் கணிக்க முடியும். என்றாலும் பிரபத்தி பண்ணியதற்காக மோக்ஷம் என்பது இல்லை. பிரபத்தி அதிகாரி விசேஷணம் அத்தனை.  தன்னுடைய போக்கற்ற, விதியற்ற தன்மையால், பகவானே உபாயமாக வேண்டும் என்கிற எண்ணம், ஞானம் பிறக்கை  அதுவே பிரபத்தி. 
கனிக்கு காம்பு அறுகிற காலம் எதுவாக இருக்கும் - ஆசார்ய சம்பந்தமோ, பிரபத்தியைச் செய்ய இச்சையோ, ருசி பிறக்க எது காரணம் என்றால் , அது பாகவத ஸமாகமத்தால் வருமது என்று ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் வார்த்தை . 
இப்படி எல்லாமாக சேர்ந்த சமுச்சய புத்தி கார்யமாக பகவத்  சரண வரணம்  பிரபதனம் என்பது.

இப்படி ஆழ்வார் கீழ் பதிகத்தில் சரணாகதியைப் பண்ணி வானவர்தம் கொடிமாநகர் கூட்டுவரே என்றும் சொல்லி இருக்கிறாரே! உடன் பரமபதத்தை இவருக்கு கொடுத்து விடலாமா? என்று ஆராய்ந்த திருவிண்ணாகரப்பன் ஆழ்வார் திருவுள்ளத்தில் இன்னும் திவ்வியதேச ஆசை விடவில்லை எனவே , ஆழ்வார் கேட்டபடி செய்தன இல்லை

நம்மாழ்வாரும் இதேபோல, பிரபந்த பிராரம்பத்திலேயே இந்நின்ற நீர்மை இனியாமுறைமை  என்று பிரார்தித்தும் வீடு தந்தான் இல்லை . காரணம் 

நாடு திருந்த;

நச்சுப் பொய்கை ஆகாமைக்கு 

பிரபந்தம் தலைக்கு கட்ட 

என்று இப்படிப் பல காரணங்களால் இனி இனி என்று இருபதின்கால்  கூப்பிடப் பண்ணினாப் போலே 

திருமங்கை ஆழ்வார் விஷயத்திலும் 

இப்பெரிய திருமொழி இவருடைய முதல் பிரபந்தம்

மாறன் மறைப்பொருளுக்கு ஆறங்கம் கூற அவதரித்தவர் இவர் 

ஆகையாலே , இவரைக்கொண்டு இன்னும் பாடுவிக்கவேண்டும் என்று நினைத்தானாய் பரமபதத்தை திருவிண்ணகரப்பன்  நல்கவில்லை ஆழ்வாருக்கு.  அடுத்து மூன்றாம் தசகத்தில் 

முன்னம் மறந்தேன் என்று இதற்கு முன்சொன்ன ஆழ்வார்  இப்போது துறப்பேன் அல்லேன். நின்திறத்தேனான தன்மையால்  பிறவாமை பெற்றது என்கிறார்.  

மானேய் நோக்கு நல்லார் மதிபோல் முகத்து உலவும் 

ஊனேய்கண் வாளிக்கு உடைந்தோட்டத்து உன்னடைந்தேன் (6-3-3)

சந்தேந்து மென்முலையார் தடந்தோள் புணர் இன்ப வெள்ளத்து 

ஆழ்ந்தேன் (6-3-4)

என்று பெண்கள் சகவாசத்தை விட்டவர் பின்னாட்டி அவர்களை வர்ணிப்பான் என்என்றால் அவர்களுடைய எண்ணத்தை விட்டாலும்  ஜன்மாந்தர வாசனை துறத்துகிறது . அதனையும் தாண்டி - உடைந்தோட்டத்து உன்னடைந்தேன் கோனே!

திருநறையூர் தேனே ! வருபுனல் சூழ் திருவிண்ணகரானே

இப்படி திருவிண்ணகர் அனுபவத்தின் நடுவில் திருநறையூர் நம்பி நினைவு நிழலாடுவதும் சினையூரல் - என்கிற பெருவெள்ளம் வருமுன் ஆற்றில் ஊற்றெடுப்பதுபோல் , இந்தப் பதிகம் முடிந்தவுடன் தொடர்ந்து 10 பதிகங்கள் நம்பி அனுபவம் நடப்பதற்கு ஏற்ப வருபுனல் சூழ் ஊறல் எடுக்கிறது ஆழ்வாருக்கு.  


திருநறையூர் -> பஞ்ச சம்ஸ்காரம் செய்த ஆச்சார்ய சம்பாவனையாக. 10 X 10 நூறு பாசுரங்கள் . அதில் முதலில் 

பெண் போகத்தினின்றும் மீண்டு , நண்ணு நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே ! என்று தாம் தனக்கு செய்யும் உபதேசம்  நமக்குமாகத் தட்டில்லை .

நாமத்திரள் மாமாளிகை சூழ்ந்த நறையூர் மேல் 

காமத் கதிர்வேல் வல்லான் கலியன் ஒலிமாலை 

சேமத்துணையாம் செப்புமாவார்க்குத் திருமாலே.  (6-5-10)

என்னையும் என்னுடைமையையும் நின் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு என்று பெரியாழ்வார் சாதித்ததுபோல்  இல்லங்கள்தோறும் திருமண் காப்பு அத்தோடு  இந்தப்பதிகத்தை அதிகரித்தது சொல்லுமவர்களுக்கு திருமாலேவஞ்சுளவல்லி ஸமேத நறையூர் நம்பியே - சேமத்துணை ஆகும்  என்கிறார் ஆழ்வார்.

அடுத்த பதிகத்தில் கோச்செங்கணான் என்கிற சோழவேந்தனுடைய 

இருக்கிலங்கு திருமொழிவாய் எண்தோள் ஈசற்கு 

எழில்மாடம் எழுபது செய்த (6-6-8)

என்று எம்பெருமானுக்கு 70 திருக்கோயில்கள் சமைத்த அவனுடைய கைங்கர்ய ஸ்ரீ: யைக் கொண்டாடுகிறார்.

இவை எல்லாம் உண்மையோ பொய்யோ என்று சங்கிப்பவர்களுக்கு 

போயமொழி ஒன்றில்லாத மெய்மையாளன் என்று தன்னைப்பற்றி சூளுரைக்கிறார்

எப்படி நம்மாழ்வார் திருவனந்தபுர பதிகத்தில் 

நின் கோயில் கடைத்தலை சீழ்க்கப்பெற்றால் கடுவினை களையலாமே - என்று குறைந்த பக்ஷம் அவனுடைய திருமுற்றத்தை துடப்பம் கொண்டு பெருக்குகிற கைங்கர்யமாவது செய்ய வேண்டு என்று உபதேசித்தாரோ, அதுபோல திருநறையூர் எம்பெருமான் விஷயமாக ஏதேனும் கைங்கர்யத்தை செய்யப் பெருமவர்களாக ஆக வேண்டும் என்பதையே 

ஆளும் பணியும் என்னைக் கொண்டான் - என்று நியமிக்கிறார் திருமங்கை ஆழ்வார்

ஒளியா வெண்ணை உண்டான் (6-7-4) = இதில் எம்பெருமானார் விஷயமாக ஒரு ஐதிஹ்யம் காட்டப்படுகிறது. கண்ணன் வெண்ணை களவாடி ஆய்ச்சியிடம் அகப்பட்டபோது, அவன் மனது திக் என்று படபடத்ததாம். ஸர்வஜ்ஞனான எம்பெருமான் விஷயத்தில் இது கூடுமா? என்கிற ஐயம் ஸ்வாமி எம்பெருமானாருக்கு பலநாள் இருந்து வந்தது . அது நிற்க

வங்கிபுரத்து நம்பி ஸ்வாமியிடம் பலமுறை எம்பெருமானுடைய திருவாராதன க்ராமம் சாதிக்கும்படிக் கேட்டிருக்க, ஆகட்டும் பார்க்கலாம் என்று சொல்லி வந்தார். அவரே ஒருசமயம் திருமலையில் எழுந்தருளினபோது அங்கே வைத்து கூரத்தாழ்வான் முதலியவருக்கு அப்படி ஒரு திருவாராதன கிரமத்தை சொல்லிக் கொடுத்தமை அறிந்து , வாங்கிபுரத்து நம்பி ஸ்வாமியிடம் வர, அவரைக் கண்டு, எம்பெருமானாருக்கு மனம் துணுக் என்று பதைத்தாம். ஆகா,இவ்வாறு அன்றோ தன் களவு வெளிப்பட்டபோது கண்ணன் மனதும் படபடத்திருக்கும் என்று புரிந்து கொண்டாராம்

இதைப்போல் இன்னுமொரு ஐதிஹ்யம் பட்டர் விஷயமாக 

பள்ளிக்கு கமலத்து இடைப்பட்ட பகுவாயலவன் முகம் நோக்கி 

நள்ளி ஊடும் வயல் சூழ்ந்த நறையூர் நின்ற நம்பியே (6-7-6) 

பாசுரத்தில் காட்டப்படுகிறது.  

கற்பிணிப் பெண்ணான தன் மனைவி நள்ளிக்கு ஆண் நண்டு அலவன் தேன் எடுத்து வர தாமரைப் புஷ்பங்களைத் தேடி சென்று முகந்த காலத்து பகலவன் மறைய, தாமரை மொட்டித்தது. அலவன் மீளமுடியாமல் அங்கேயே சிறைப்பட்டதுமனைவியை தனிமையில் விட்ட காரணத்தால் அலவன் தாமரை மலரின் உள்ளே அலமந்து சுற்றிசுற்றி உறங்கியும் விட்டது. அத்தால் அதன் மேனி மகரந்த துகள்கள் ஜ்வலிக்க, பிற்றைநாள் சூரியன் உதித்ததும் வீடு திரும்பிய அலவனை கதைவடைத்து நள்ளி  ஊடுகிற வயல் என்பதாக நறையூரின் இயற்கை வர்ணனம் பண்ணுகிறார் ஆழ்வார். இதனைச் சொல்லி பட்டரிடம் நஞ்சீயர் ஆண் நண்டு தவறு ஏதும் செய்யாதபோது பெண் நண்டு இப்படி கதைவடைத்து தள்ளுவது சரியல்லவே என்று கேட்க, பெண்ணரசு வீடு காணும் அது என்றாராம். அதாவது அந்த திவ்ய தேசத்தில் வஞ்சுளவல்லி தாயாருக்கல்லவோ தலைமை படித்தனம் என்பதை நினைவில் கொண்டு அப்படிச் சொன்னார் என்பர்.


பெடை அடர்த்த = கோயில் திருமொழி இதில் தன் நெஞ்சைக் குறித்து சரணாகதியை உபதேசித்தார் ஆழ்வார்.

வாணிலா முறுவல் 

தாயே தந்தை 

ஏழை ஏதலன் 

என்று சரணாகதி - ஸக்ருத் ஏவ - ஒருமுறை என்று சொல்லி இருக்க பல முறை பல திவ்ய தேசங்களில் செய்யலாமா? என்றால் 

ஸக்ருத் என்பதற்கு ஸகசைவ = சடக்கென = எப்பெப்போதெல்லாம் நமக்கு ஆபத்து வருகிறதோ அப்போதெல்லாம் சரணாகதியைச் அனுஷ்டிக்கலாம் என்று ஆழ்வான்  நிர்வாகம்

சரணாகதியை அனுஷ்டித்த பிறகு கிடைக்கிற பேறு () பாக்கியம் அதனைப் பார்க்க யாவதாயுஷம் அதனை அனுஷ்டிக்க பிராப்தம் என்பது எம்பார் நிர்வாகம்

ஸக்ருத் ஏவ பிரபந்னாய - அபயம் ததாமி  என்று வாக்தனாம் பண்ணுகிற அவனைப்பார்க்க புநராவர்த்தி பிரபதனம் அவனை துராராத்தியனாக காட்டலாகும். ஆகவே கூடாது. ராஜ்யத்துக்கு எலுமிச்சம் பழமும், பலஹரையும் போல நம்மையையும் பலத்தையும் பார்க்க அதை பன்னி உரைத்தாலும் போதாது. என்றாலும்  ஆசார்யமுகேண துவய உச்சாரண அநுச்சாரண சரணாகதி ஒருமுறைதான். அதன் அர்த்தாநுஸந்தானம் அனவரதமும் நடக்கலாவது என்பதில் இருக்கலையாருக்கும் விசம்வாதம் இல்லை.


கிடந்த நம்பி = தன் நெஞ்சைக் குறித்து சரணாகதியை உபதேசித்தவர், அதற்கு ஏற்ற குணவிசிஷ்டனானவனுடைய நாம கிரகணம் யாது  என்ன

இதுதான் வலம் தரும் என்கிறபடியே எல்லா அபேக்ஷிதங்களையும் கொடுக்கும் என்பதாலே நாராயண நாமத்தை பரிகிரஹிக்கச் சொல்லுகிறார்

ஆஸ்ருத ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதக குணங்கள் என்னஆஸ்ருத காரிய ஆபாதக குணங்கள் என்னஅனைத்தும் இதிலே விவக்ஷிதம்.

நான் கண்டு கொண்டேன் நமோ நாராயணா என்னும் நாமம் - என்று தொடங்கி 

நடுவில் நமோ நாராயணமே நமோ நாராயணமே - என்று ஓதுவித்து 

முடிக்கும்போதும் நாராயணா! மணிவண்ணா! நாகணையாய்! வாராய் என் ஆரிடரை நீக்காய்என்று இப்படி ஆதி மத்திய அவஸானத்திலே பேசிய திருமங்கை ஆழ்வார். தனக்கு திருமணம் கொல்லையில்  கிடைத்த இந்த மந்திரத்தை நானும் சொன்னேன்! நமரும் உரைமின்! நமோ நாராயணமே! என்று நாவில் பரவி, நெஞ்சில் கொண்டு சொல்லுங்கள் என்கிறார்


மனப் பூர்வ : வாக் உத்தர : என்று கிரமம் இருக்க, நாவில் பரவி, நெஞ்சில் கொண்டு என்று  பின்னது முன்னதாகச் சொல்லுகிறாரே ஆழ்வார் என்றால் நாமத்தின் வைபவம் நெஞ்சில் பட்டவாரே கிரமம் மறந்து பேசுகிறார் எனலாம். கிரமம் ஒழிய சொன்னாலும் தன் ஸ்வரூபம் கெட நில்லாது காரியகரமாகும் என்பதைச் சொன்னாராகவுமாம்.


ஸப்த சதகம் :


இந்தப் தசகம் முதல் மூன்று பத்துக்களால் திருநறையூர் அனுபவம் தொடருகிறது.

கறவா மடநாகு தன் கன்று உள்ளினாற் போல் = கறவா மடநாகு தன் கன்றை  உள்ளினாற் போல் என்று கொண்டால் ஆழ்வாராகிற கன்று நம்பியை பிறவாமை வேண்டி உள்ளியமையாகிற உபமான-உபமேயத்துக்குச் சேராது என்பதால் 

கறவா மடநாகை ()தன் கன்று உள்ளினாற் போல் என்று வைத்துக் கொள்ள வேண்டும் என்று பட்டர் சாதிப்பாராம்

புள்ளாய் ஏனமுமாய் புகுந்து என் உள்ளம் கொண்ட கள்வன் = இப்படி எம்பெருமான் அடியார்கள் உள்ளத்தில் ஆசைப்பட்டு வருமத்தை பல ஆழ்வார்களும் பேசி இருக்கிறார்கள்பொய்கையை ஆழ்வார்  - 

உளன் கண்டாய் நன்நெஞ்சே உத்தமன் என்றும் 

உளன்கண்டாய் உள்ளுவார் உள்ளத்து -- உளன்கண்டாய் 

வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும் 

உள்ளத்தில் உள்ளானென் ஓர்,

பக்கதர்களுடைய உள்ளத்தில் இருக்க வேண்டும் என்று திருப்பாற்கடலில் நின்றும் புறப்பட்ட எம்பெருமான்  விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு என்பதாக திருமலையில் நின்றான். பிறகு ஆழ்வார் நெஞ்சுக்குள் வந்தான் என்கிறார்

காணலுறுகின்றேன் கல்லருவி முத்துதிற 

பேணிவரு வேங்கடவா என்னுள்ளம் புகுந்தாய்  

என்று திருமழிசை ஆழ்வாரும் திருவேங்கடத்தில் பிரத்யக்ஷமாய் சேவித்த பெருமான் தன் உள்ளம் புகுந்து இருக்கிறான் என்கிறார் அவரும்

ஆபாசமான இந்த உள்ளத்தில் அப்படி இருப்பானோ? என்றால் முண்டகோபநிஷத் சொல்லுகிறது 

அங்குஷ்ட மாத்திர புருஷ : வித்யதே 

விஜிகுச்சதே - என்பதாக. இதற்கு மேலாக நம்மாழ்வார் திருவுள்ளத்துக்கு அவன் வர 

பொல்லா ஒழுக்கு அழுகுடம்பு 

நீசனேன் நிறை ஒன்றுமிலேன் என்று ஆழ்வார் விலகப் பார்க்க 

என்கண் பாசம் வைத்த பரம்சுடர் சோதி

மலைமேல் தான் நின்று என்மனத்துள் இருந்தானை 

நிலை பேர்க்கலாகாமை நிச்சித்திருந்தேனே என்கிறார் அவரும்

வந்தவன் செய்த காரியம்தான் என்ன என்றால் 

என்நெஞ்சத்துள் இருந்து இருந்தமிழ்நூல் இவை மொழிந்து 

என்பதாக தன்னை திருவாய்மொழி பாடுவித்தான் என்கின்றார்

தனிமரம் தோப்பாகுமா? ஆகாது அல்லவா? ஆகவே அதே அனுபவத்தை திருமங்கை ஆழ்வாரும் 

நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டாக

மாட்டினேன் அத்தனையே கொண்டு என்வல்வினையை 

பாட்டினால் என்நெஞ்சத்திருந்தமை  

காட்டினாய் திருக்கண்ணபுரத்துறை அம்மானே!

என்று இப்படி ஆழ்வார்கள் ஒருமிடராக அந்த எம்பெருமான் தங்கள் தங்கள் நெஞசத்துள் வந்தமையும், வந்து அமர்ந்தபடியாலேதான் வாய் வழி பதிக்கங்கள் புறப்பட்டன. தான் உள்ளே இருந்தமை கவிபாடுவித்து தன்னைக் காட்டினான்  என்கின்றனர்


தாய் நினைந்த  கன்றே ஒக்க என்னையும் தன்னையே நினைக்கச் செய்து தான் எனக் 

காய் நினைந்து அருள் செய்யும் அப்பன் (7-3-2)

வந்ததனால் வந்து என் நெஞ்சிடம் கொண்டான் மற்றோர் நெஞ்சறியான் (7-3-3)

- என்பதாக அவனைப்பற்றிய என் நினைவும் அவன் நினைவின் வழி வந்தது என்கிறார்


உருக்காட்சி = என்பது புலன்களை சொற்களாலே கவர்ச்சி உடையதாக - அதாவது மன எழுட்சி, புலங்களை கிளர்ந்து விடுதல் பொருட்டு செய்யும் யுக்தி. அந்த வகையில் 

வெண்ணெய் உண்டு உரலினிடை ஆப்புண்ட 

தீங்கரும்பினை தேனை நன்பாலினை (7-3-5)

என்பவை சுவைப்புல  உருக்காட்சி என்று சொல்லப்படும் . இவ்விதமே ஆண்டாள் பாடிய திருப்பாவையில் 

புள்ளும் சிலம்பினகாண்

அரி என்ற பேரரவம்  

கீசு, கீச்சென்று ஆனைசாத்தன் பேச்சரவம் 

காசும் பிறப்பும் கலகலப்ப 

மத்தினால் ஓசை படுத்த தயிரரவம் 

கேசவனப் பாடவும் 

மனத்துக்கினியானை பாடவும் 

கோழி அழைத்தன காண் 

பல்கால் குயிலினங்கள் கூவின காண் 

இவை செவிப்புல உருக்காட்சி.


ஊட்டுப்புல உருக்காட்சிக்கு 

எருமை சிறுவீடு மேய்ந்தனகாண் 

செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின 


மனவுணர்வு உருக்காட்சி :

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய 

பேய்முலை நஞ்சுண்டு 

கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி 


நுகர்வுப்புல உருக்காட்சி :

வாச நறுங்குழல் ஆய்ச்சியர் 

தூபம் கமழ 

நாற்றத்துத்துழாய் முடி நாராயணன் 

என்பதாக ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்கிறார்கள்


திருச்சேறை -> கண்சோற வெங்குருதிநம்மாழ்வார் பாடிய திருவாய் மொழியில் நெடுமாற்கடிமை போல பாகவதப் பிரபாவம் சொல்லுகிறது இதில் ; பகவத் கைங்கர்யத்துக்கு எல்லை நிலம் பாகவத கைங்கர்யம் ஆகையாலே.

தண் சேறை எம்பருமான் தாள் தொழுவார் 

காண்மின் என் தலை மேலாரே (7-4-1)

இந்த பதிகத்தில் இரண்டு ஐதிஹ்யங்கள் சொல்லப்படுகின்றன

ஒன்று ஆளவந்தார் சிஷ்யர் மாறனேரி நம்பிக்கு பெரிய நம்பி அந்திம கிரியைகளை செய்தது விஷயமாக நம்பியை இதர சிஷ்யர்கள் குறைவாக நினைக்க, எம்பெருமானாரும் ஏன் இப்படிச் செய்தீர் என்று  கேட்டார். அதற்கு அவர் ஜடாயு மஹாராஜர் விருத்தாந்தத்தைக் காட்டி ராமனை விட தான் உயர்ந்தவரும் இல்லை. ஜடாயு பக்ஷியை விட இந்த மாறனேரி நம்பி தாழ்த்தவரும் இல்லையே ? ஆழ்வார் பாடிய பயிலும் சுடரொளியும் நெடுமாற்கடிமையும் கடலோசையோஎன்றாராம்

இரண்டாவது ஐதிஹ்யம் - அழகியமணவாளப் பிள்ளை அரையர் ஒருசமயம் திருச்சேறை வழியாக செல்ல நேர்ந்தபோது, அவர் ஊர் நடுவே செல்லாமல், எல்லை வழியே சென்றாராம். அதைக்கண்டு சிலர் திவ்யதேசத்து எம்பெருமானை சேவிக்காமல் புறம்பே போகிறீரே என்றதற்கு அவரும் - ஆழ்வார் 

தண் சேறை எம்பருமான் தாள் தொழுவார் 

காண்மின் என் தலை மேலாரே 

என்று அநுஸந்திப்பதால், அடியேன் போய் ஆழ்வார் தலையில் அமர்வதான அபசாரம் வேண்டாம் என்றாராம். இப்படி பாகவதப் பிரபாவம் சொல்லும் பாசுரங்கள் இந்தப் பதிகத்தில்


திருவழுந்தூர் -> உபரிசர வஸு  தன்னுடைய தபோ வலிமையால் தேரில் ஆகாசத்தில் ஸஞ்சரிக்கும் வல்லமைப் பெற்றிருந்தான். ஒருசமயம் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் இடையில் நடந்த விவாதத்தில், இவன் மத்யஸ்தனாக இருந்து தீர்ப்பு சொல்லுங்காலத்தில், தேவர்களுக்கு பக்ஷபாதகமாக நடந்தான் என்பதாக முனிவர்கள் அவனை சபித்தபடியால் , அவனுடைய தேர் பூலோகத்தில் இந்த திருவழுந்தூரில் விழுந்தது என்றும் அந்த காரணத்தாலே திருவழுத்துஓர் - தேரழுந்தூர் ஆயிற்று என்கிற புராணக்கதை இவ்வூரைப் பற்றி உண்டு

ஆமருவி நிரைமேய்த்த அமரர் கோமான் - கோஸகன் என்பது இந்த திவ்வ்ய தேசத்து எம்பெருமான் திருநாமம். 40 பாசுரங்களை இவர் விஷயமாக  அருளிச்செய்கிறார் ஆழ்வார்

திவத்திலும் பசுநிரை மேய்ப்புவத்தி என்று நம்மாழ்வார் கண்ணனுக்கு பசுமாடுகளை மேய்ப்பத்தில் விருப்பம் என்கிறார். திருமங்கை ஆழ்வாரோ கன்றுமேய்த்து இனிதுகந்த காளா என்று கன்றுக்குட்டியை மேய்ப்பதிலே அவனுக்கு விருப்பம் என்கிறார். அதற்குச் சேர அணியார் வீதி அழுந்தூர் பெருமையும் ; அங்கமலக் கண்ணனை அங்கு கண்டு கொண்டு களித்தமையும் பேசி  

திருவுக்கும் திருவாகிய செல்வா! = பிராட்டியான லக்ஷ்மிக்கும் லக்ஷ்மீகரத்தை அளிப்பவன்

தெய்வத்துக்கரசே! = ஸர்வேஸ்வரன் 

செய்ய கண்ணா! = அகன்ற, மலர்ந்த, குளிர்ந்த கண்களை உடைய புண்டரீகாக்ஷன் .

கஸ் ஸ்ரீ ச்ரியா : ?  புண்டரீக நயன : கஹா ? புருஷோத்தம கஹா ? - என்று ஆளவந்தாரும் ஸ்தோத்திர ரத்னத்தில் இத்தைக்கொண்டே பாடினார் போலும்

செங்கமலத் திருமகளும் புவியும் = திருப்பாற்கடல் க்ஷீராப்தி நாதன் பற்றியது. .

பாசுரம் 2,4,5,10 = விலங்காய் அவதாரம் செய்தமைப் பற்றியது.

பாசுரம் 3 = கஜேந்திர விருத்தாந்தம் , பரமபத நாதநைப் பற்றியது.

பாசுரம் 6,7,8,9 = வாமன, ராம, கிருஷ்ணாவதாரங்களைப் பற்றியவை.  

இப்படி பர, வியூக, விபவங்களை செய்துகந்தவன் அணியழுந்தூர் நின்ற அமரர் கோ என்பதாக அனுபவிக்கிறார் ஆழ்வார்

பதிகத்தை முடிக்கும்போது பலன் சொல்லுகையில் 

கலிகன்றி ஒலிசெய்த இன்பப் பாடல் 

ஒன்றினோடு நான்கும் ஓரைந்தும் வல்லார் 

ஒலிகடல்சூழ் உலகாளும் (7-8-10)

என்று பேசுகிறாரே? இவர்தான் திருவிண்ணகர் பதிகத்தில் வேண்டேன் மனை வாழ்க்கை என்று உதரித்தள்ளியவர் ஐச்வர்யானுபத்தை பலனாகச் சொல்லுகிறாரே என்றால்  ஆழ்வார் பிறந்து அவைதிகமான ஐஸ்வர்யமும் வைதிகமாயிற்று என்று பட்டர் நஞ்சீயருக்குச் சொன்ன வார்த்தையைச் ஸ்மரிப்பது


சிறுபுலியூர் -> வியாக்ரபாதர் என்கிற முனிவர் சிதம்பரம் நடராஜரை தரிசிக்கச் சென்று பிரார்தித்தும் சித்தி பெறமுடியாது, சிறுபுலியூருக்கு வந்து எம்பெருமானை சேவித்து சித்தி அடைந்தார் என்று வரலாறு. மற்றப்படி ஒருசமயம் கருடனுக்கும், அனந்தனுக்கும் யார் பெரியவன் என்கிற விவாதம் வர, அதனை தீர்க்கும் முகமாக கருடனுக்கு எம்பெருமான் சன்னதியில் நித்ய வாசமும், அனந்தனுக்கு குளக்கரையில் தனிக்கோயில், விசேஷ திருவாராதனமும் என்று ஏற்பாடுத்தியதாக ஐதிஹ்யம்

இவ்வெம்பெருமான் கிருபாசமுத்திரப் பெருமாள்  , ஸ்ரீரங்கம் பெரிய கோயில் போல தெற்கே திருமுக மண்டலம்

நம்மாழ்வார் யான் பெரியன்! நீ பெரியை என்று யார் அறிவார் என்று கேள்வி கேட்டதுபோல , இவ்வாழ்வாரும் 

சேயோங்கு தண் திருமாலிருஞ்சோலை மலை உறையும் 

மாயா! எனக்குரையாய் இது - மறை நான்கினுளாயோ?

தோயோம்புகை மறையோர் சிறுபுலியூர் சலசயனத்து 

ஆயோ? உனதடியார் மனத்தாயோ? அறியேனே.(7-9-7)

என்று அயன ஸப்தார்த்தமாக கேள்விக் கணைகளைத் தொடுத்துநார ஸப்தார்த்தத்தை பதிலாக

கருமா முகில் உருவா! கனல் உருவா! புனல் உருவா!

பெருமாள் வரை உருவா! பிற உருவா! நினதுருவா !

திருமாமகள் மருவும் சிறுபுலியூர் சலசயனத்து 

அருமாகடல் அமுதே! உனதடியே சரணாமே 

- என்று சொல்லி சரணாகதராகிறார் .  


திருக்கண்ண மங்கை -> திருக்கண்ணமங்கை ஆண்டான் பரமபதம் பெற்ற ஸ்தலம். திருக்கண்ணமங்கை ஆண்டான் ஸ்வவியாபாரத்தை விட்டார். பிராட்டி ஸ்வசக்தியை விட்டாள். திரௌபதி லஜ்ஜையை விட்டாள் என்று ஸ்ரீவசன பூஷணத்தில் ஸ்வாமி பிள்ளை லோகாச்சாரியார் ஸாதிக்கிறபடி , இரண்டு நாய்களுக்கா அதனதன் எஜமானர்கள் சண்டையிட்டு ரக்ஷித்தமையைப் பார்த்து , ஆண்டான் எம்பெருமான் திருவடியே தஞ்சம் என்று கோயில் வாசலில் இருந்து மோக்ஷம் பெற்றார் என்பது வரலாறு. அதை காட்டும் வகையில், அவருடைய திருவரசு, எப்படி எம்பெருமானாரை  திருவரங்கம் பெரிய கோயிலிலேயே பள்ளிப் படுத்தினார்களோ, அதுபோல திருக்கண்ணமங்கை சன்னதி பிராகாரத்தின் உள்ளேயே அமைந்துள்ளது

இந்த திருக்கண்ண மங்கை ஆண்டான் என்பவர் எப்படி எம்பெருமானாருக்கு முதலியாண்டானோ அதேபோல் நாதமுனிகளுடைய சகோதரி மகனாவார். நாதமுனிகள் நம்மாழ்வார் அருளால் தாம் அதிகரித்த திவ்யப்பிரபந்தம் நாலாயிரமும் இசையோடு சேர்த்து ஆண்டானுக்கு ஓதுவித்தார் என்ற காரணத்தால், இவருக்குத்தான்  பிரபந்த பிரதம அத்யாபகர் என்கிற பெருமையும் உண்டு.

பதிகத்தில் பலஸ்ருதி பாசுரத்தில் ஆழ்வார் 

மெய்மை சொல்லின் வெண்சங்கம் யொன்றேந்திய 

கண்ண ! நிந்தனுக்கும் குறிப்பாகில் 

கற்கலாம் கவியின் பொருள் தானே (7-10-10)

என்பதாகச் சொல்லுகிறாரே இது தகுமா? என்றால் 

திருமங்கையாழ்வார் பனுவல் ஆறும் சாதாரணமானவை அல்லவே . சொல்லாட்சி, பொருளாட்சி, கவிநயம்  இத்தனையும் உண்டு இதிலேஅதாவது ஆஸு கவி, சித்ர கவி, மதுர கவி, விஸ்தார கவிஎன்று நாலுகாவிப் பெருமாள் அல்லவோ இவர்

இவருடைய பனுவல்கள்  

நெஞ்சுக்கிருள் கடி தீபம் 

நெடும் பிறவி நஞ்சுக்கு நல்ல அமுதம் 

தமிழ் நன்நூல் துறைகள் அஞ்சுக்கு இலக்கியம் 

ஆரண சாரம் 

பரசமய பஞ்சுக்கு அனலின் பொறி 

என்பதால் கற்பது, தரிப்பதும், பொருள் அறிவது எல்லாம் அவர்தம் அருள் இன்றி ஆகதே.

கண்ண ! ஞானத்துக்கு ப்ரதீகமான வெண்சங்கை ஏந்தின உனக்குமாய் இந்த திருமங்கை ஆழ்வார் பாடிய திருமொழியின் 

வாக்கியார்த்த.

பதபதார்த்த.   

வெஞ்சநார்த்த,

ஸ்வாபதேச

அந்யாபதேசாதிகளை கற்கவேண்டும் என்கிற குறிப்பு உண்டாமால் பரகால சிஷ்யனாய் வர வேண்டும் என்கிறார் இத்தால் . அந்த வகையிலே ஆழ்வார் கலிகன்றி தாசராக (நம்பிள்ளையாக) அவதரித்தபோது , திருக்கண்ண மங்கை திவ்யதேசத்து எம்பெருமானும் பெரியவாச்சான்பிள்ளை என்கிற கண்ணனாக அவதரித்து , பரகால சிஷ்யன் என்கிற பெருமையை தேடிக்கொண்டான் என்பது குருபரம்பரையில் காணும் வரத்து.  


இவ்வாறாக அவன்  பரமபதத்தில் இருந்து புறப்பட்டு, பாற்கடல், திருவேங்கடம், ஆழ்வார் நெஞ்சு என்று இங்கு வந்து சேர்ந்ததுபக்தோசிதன் என்கிற விருதுக்குச் சேர திருமங்கை ஆழ்வாருக்கு சிஷ்யனாய் தன்னை சமைத்துக் கொண்டது இத்தனையும் ,  (மேனகையிடம் தோற்ற) விஸ்வாமித்ர, (புத்ர வாத்சல்யரான) சாந்தீபினியாதிகளிடம் சிஷ்ய விருத்திப் பண்ணின குறைதீரவே எனலாம்


அஷ்டம சதகம் :


ஆழ்வார் நம்மாழ்வார் கிருஷ்ணாவதாரத்தில் மிகவும் ஈடுபட்டவர் என்றாலும் , அவர் திருத்தோலைவில்லி மங்கலம் என்று சொன்னால்தான் ரசிக்குமாம். இனிக்குமாம். அதேபோல நம்பெருமாளென்று பட்டரும், எம்பெருமானாரே என்று சோமாசியாண்டானும் சொன்னால் எவ்வளவு இனிக்குமா அதேபோல திருக்கண்ணபுரம் என்று திருமங்கை ஆழ்வார் சொல்ல ரசிக்குமாம். அப்படி திருமங்கை ஆழ்வாரைப் படுவித்த முக்கோட்டை திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள் ஆகும். இந்த எம்பெருமானுக்கும் 10 க்ஸ் 10 = 100 பாசுரங்களை சமர்ப்பித்தார் ஆழ்வார். திருநறையூர் நம்பியிடம் பெற்ற  திருமந்திரத்தின் பொருளை திருக்கண்ணபுரம் சௌரிராஜனிடத்தில் பெற்றார் . அந்த ஆசார்ய பிரதிபக்தியாலே இவருக்கும் அரங்கனைக் காட்டிலும் இரட்டைப் படித்தனம்

முதல் 50 பாசுரங்கள் பெண்ணான தன்மையில். மேல் 50 பாசுரங்கள் ஆழ்வார் தானான தன்மையில் ஆண் பாசுரங்கள்.

நாயிகா பாவத்தில் முதல் 2 பதிகம் தாய் பாசுரங்கள். அடுத்த மூன்று பதிகங்களும் மகள் பேச்சு

இதற்கு முன் பதிகமான திருக்கண்ண மங்கை பதிகம் பலஸ்ருதி பாசுரத்தில் ஆழ்வார் 

மெய்மை சொல்லின் வெண்சங்கம் யொன்றேந்திய 

கண்ண ! நிந்தனுக்கும் குறிப்பாகில் 

கற்கலாம் கவியின் பொருள் தானே (7-10-10)

என்று அத்திவ்ய தேசத்து எம்பெருமானை ஆழ்வார் நெஞ்சினால் ஸம்ஸ்லேஷித்தார். ஆனால் அவரை கண்களால் நேரே கண்டு, கைங்கர்யங்களை செய்தலாகிற பாஹ்யமான ஸம்ஸ்லேஷம் கிடைக்கவில்லை. அதனாலே தன்னிலை போய் பெண் பாவனையில் , மகளாக பேசவும் சக்தி யற்றவளாய், தாய் தன் மக்களை பற்றி அசலாகத்தாரிடம் பேசுவதாக பாசுரம்இடுகிறார் 

சிலை இலங்கு பொன் ஆழி -> எம்பெருமான் ஆபரண அழகு, ஆயுத அழகு, அவருடைய சௌந்தர்ய , சௌகுமார்யம், புருஷோத்தமத்வம் அத்தனையிலும் என்பெண் தோற்றாளாய் , இவள் நெஞ்சை அவன் அபகரித்தமையை சொல்லுகிறது

தெள்ளியீர் தேவர்க்கும் தேவர் திருத்தக்கீர் -> நெஞ்சைத்தான் பறித்தவன் ஆபரணங்களையாவது விட்டு வைக்கலாமே. அவைகளையும் பறித்திட்டானே. தம்மை கொடுக்க வேண்டி இருக்க, இருப்பதையும் பறிப்பது தக்கதோ ? என்கிறது.

கரை எடுத்த சுரி சங்கம் -> வளையல்களை பறித்திட்டமை தாயார் சொன்னது இதற்கு முன் பதிகம். வளையலை இழந்தத்தை தானே சொல்லுவது இந்த 3 ஆம் பதிகம்

விண்ணவர் தங்கள் பெருமான் -> தலைவி சூடிய பூவில் தேன் நுகர வத்த தும்பிகளை , இப்போது மலர் சூடவில்லை, நீங்கள் தலைவனை அழைத்து வர க்ருஷி பண்ணினால்அப்போது மலர் சூடுவேன் . எனவே தலைமகன் வந்தவாறே வந்தூதும்படி தூது விட்ட பதிகம்

தந்தை காலில் விலங்கற -> ராத்திரி வியசனம் . தூதுபோன தும்பி திரும்பவில்லை. நேரம் போயிற்று. அந்திப் பொழுதும் வந்தது. சூரியன் மறைய இருள் கவ்விற்று. திசைகள் தெரியவில்லை. அருகில் இருந்த தாய்மார்களும், தோழியரும் இவளைத் தேற்றி அழித்து செல்ல வேண்டும் என்று பாடுபட, பகவானையே நினைவு படுத்தும் தென்றல் முதலான வாதக பதார்த்தங்கள் அவளை பாதக படுத்த வருந்திப் பேசிய பாசுரங்கள்.

இனி மேலுள்ள 5 பதிகங்களும் பிரணவத்தின் அர்த்தத்தை , பெருமானைத் தவிர மற்ற யாருக்கும் நாம் ஆட்பட்டோம் என்கிற அநன்யார்ஹ சேஷத்வத்வம் சொல்லி , தத் சேஷத்வத்தோடு நில்லாமல் ததீய சேஷத்வம் அடியார்க்கு அடிமை பர்யந்தமாக பேசுகிறார்

தொண்டீர்! உய்யும்வகை கண்டேன் -> திருமந்திரத்தில் நடுவில் உள்ள நம: என்கிற பதத்தின் உபாய பாவத்தை - திருக்கண்ணபுரத்தில் உள்ள சௌரிப்பெருமாளே உபாயம் என்பது 6ஆம் பதிகத்துக்கு விஷயம்

வியமுடை விடையினம் -> உபாய ஸ்வீகாரத்தை அடுத்து அவனும் அவளுமான சேர்த்தியிலே பண்ணுகிற கைங்கர்யம் உபேயம். பிராப்பியம் சௌரிப் பெருமாள் கைங்கர்யமே. பிராப்பியம் திருக்கண்ணபுரம் க்ஷேத்ரமே என்பதைச் சொல்வது 

7 ஆம் பதிகம்

வானோர் அளவும் முதுமுந்நீர் -> இப்படிப்பட்ட பிராப்பிய-பிராபக ஜ்ஞானம் ஏற்படாத அந்நாளிலே எதிர்சூழல் புக்கு எமைப் வளைக்க அவன் எடுத்த அவதாரங்கள் ஒவ்வொன்றாக 9 பாசுரங்களிலும், கடைசீ பாசுரத்தில் அவைகள் அனைத்தையும் வரிசைப் படுத்திச் சொல்லி, அவர் கிட்டி வந்தபோதெல்லாம் தான் வெட்டிக் கொண்டு போனது பழுதாகாதா படிக்கு இழந்தது இழந்ததேயாய் முடியாமல் , அந்த தசாவதார பெருமாளும் பின்னானார் வணங்கும் சோதியாய் சௌரிப்பெருமாளாக எழுந்தருளி இன்று தம்மை அழைத்து திருமந்திரத்தின் பொருளை எல்லாம் உணர்த்தி கைங்கர்யத்தை கொடுத்து விட்டார் என்கிறது 8 ஆம் பதிகம்

கைமான மதயானை - > அகார வாச்யன் பரமாத்மா. மகரா வாச்யன் ஜீவாத்மா. இருவருக்குமான அநன்யார்ஹ சேஷத்வமாகிற ஸம்பந்தத்தை - வேறு யாருக்கும் அடிமைப் பட்டவன் அல்லன் ஜீவாத்மா என்பதைச் - சொல்லுவது உகாரம்இதை உணர்த்தும் ஓம் என்கிற பிரணவத்தின் அர்த்தத்தை சாதித்தார் 9 ஆம் பதிகத்தில்.

வண்டார்பூ மாமலர் மங்கை -> ஓங்காரத்துக்கு அடுத்த பதமான நம : என்பதின் உள்ளுரைப் பொருளை இந்த தசகத்தின் கடைசீ பதிகத்தில் சொல்லி இறை அடியான் என்பதைவிட இறை அடியார்க்கடியான் என்கிற பாகவத சேஷத்வமே உத்தேஸ்யம் என்று தலைகட்டுகிறார்ஜ்ஞாநானந்தங்கள் தடஸ்தமாய் நிரூபித ஸ்வரூப தர்மங்கள் அத்தனை போக்கி ஆத்மாவுக்கு அழியாத பெயர் அடியான் என்பதிறே. அதிலும் பாகவத சேஷத்வம் ஸ்வரூப நிரூபக தர்மம் என்கிறது


நவம சதகம் :


மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியேல் வாழலாம் மடநெஞ்சே! என்கிற கணக்கிலே 

திருவஷ்டாக்ஷர மந்திர தீக்ஷை பெற்று 

அக்ஷர லக்ஷம், அக்ஷர கோடி அதை ஜபம் செய்து 

அதற்கு புரஸ்சரணம்  மந்தரம், தர்ப்பணம், ஹோமம் முதலியன செய்தால் 

உபாஸ்யனுக்கு மந்திர வாச்யனான எம்பெருமான் சிலவினாடிகள் ஸ்வப்னத்தில் பார்ப்பதுபோல் காட்சி கொடுத்துவிட்டுப் போகலாம்

ஆச்சாரியனுடைய பிரபாவத்தாலே, சிலருக்கு எம்பெருமான் தன்னை காட்டிக் கொடுப்பதும் உண்டு. நாரதருடைய உபதேசத்தாலே துருவன், பிரஹலாதன் இவர்களுக்கு எம்பெருமான் நேரடியாக சேவை சாதித்துள்ளான். ஆனால்,

பதரிகாச்ரமத்தில் நரேனுக்கு, திருமாங்கொல்லையில் திருமங்கை ஆழ்வாருக்கும் ஆக இவ்விரண்டு பேர்களுக்கு மட்டுமே 

தானே நேரில் வந்து உபதேசித்திருக்கிறான். மந்திரத்துக்கு யார் தேவதையோ அந்த தேவதையிடம் இருந்தே மந்திரத்தைப் பெற்ற பெருமை திருமங்கை ஆழ்வார் ஒருத்தருக்கே உண்டு எனலாம். அப்படிப்பட்ட வைலக்ஷண்யம் அவருடைய பிரபந்தங்களில் தோற்றத்தானே செய்யும்

கலயாமி கலி துவம்ஸம் என்று இவ்வாழ்வாருக்குண்டான வைசிஷ்யம். மற்றய ஆழ்வார்கள் கலிக்கு ஆள்பட்டார்களோ

என்றால் , அது விஷயமல்ல. பரீக்ஷித்து மஹாராஜா கலியை வென்று ஓட்டும்போது, அது தனக்கு இரண்டு இடங்களையாவது சொல்லு, அங்குதான் ஒதுங்கிக் கொள்கிறேன் என்ன தங்கத்திலும், பெண்களிடத்திலும் இருப்பாயாக என்று அனுமதித்ததின் பேரில் அதாவது தங்கத்தை ஆசைப்படுமவர்களும், பரஸ்திரீயை விரும்புவர்களும் கலிபுருஷநாள் பீடிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. ஆனால் திருமங்கை ஆழ்வார் குமுதவல்லி என்கிற பெண்ணாலும், அவைதிகமான புத்த விக்ரகத்தை கொண்டு வைதிகமான திருவரங்கம் திருச்சுற்று மதில் கைங்கர்ய திருப்பணிகளைச்  செய்தபட்டியலும், ஏனைய ஆழ்வார்களுக்கு இல்லாத  கலி வைரி, கலி துவம்ஸர் என்கிற ஏற்றம் இவருக்கு வந்ததுஇவர் கற்றதும் திருவெட்டெழுத்து. உற்றதும் கற்றதில் உயர்ந்ததான அவன் அடியார்க்கடிமை

திருவஷ்டாக்ஷர மந்திர விவரணமாக உள்ள ஆழ்வார்கள் பிரபந்தங்களில், திருப்பல்லாண்டு தொடங்கி அமலனாதிபிரான் பர்யந்தமான ஓம் என்கிற திருமந்திரத்தின் விவரணமும், மதுரகவி ஆழ்வாருடைய கண்ணினுள் சிறுத்தாம்பு நம என்கிற பதத்தின் விவரணமாக  முதலாயிரத்தில் சொல்லப்பட்டன. இனி நாராயண பத விவரணம் இரண்டாம் ஆயிரத்தில் அதாவது திருமங்கை ஆழ்வாருடைய திருமொழியிலே சொல்லப்படுகிறது. இப்படி நாராயணாய பதத்தின் அர்த்தத்தை சொல்லத் தகுந்த அதிகாரி யாராக இருக்க முடியும்? ஸாக்ஷத் நாராயணனிட மிருந்தே அந்த  மந்த்ரத்தைப் பெற்ற திருமங்கை ஆழ்வார் அல்லவோ உத்தம அதிகாரி? எனவேதான் எம்பெருமான் இவரைக் கொண்டு இத் திருமொழி பாடுவித்தான் போலும்

முதல் பதிகம் வாடினேன் வாடி தொடங்கி , திருநெடுந்தாண்டகப் பாசுரம் மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியில் வாழலாம் மட  நெஞ்சமே! என்பது வரையிலுமாய், நடுவிலும் நின் திருவெட்டெழுத்தும் கற்று என்ற இடமும் சரி , நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாரணமே என்ற இடத்திலும் சரி மூல மந்திரமான திருமந்திரமே இவர் உபதேசிக்கப் போந்தது என்பது தெளிவு

நர: = ஜீவதத்வத்தைச் சொல்லுவது.

நாரா: = அந்த ஜீவதத்வத்தின் சமூகத்தைச் சொல்லுவது.

நாரா : யஸ்ய ஸஹா அயனம் = நாராயண :

இப்படி மந்திரத்துக்கு அரசனான திருமந்திரத்தை, தேவதைகளுக்கு அரசனான மந்திர தேவதையே , திருமணங்கொல்லையில் மரங்களில் அரசனான அரசமரத்தடியில்ஆலிநாட்டரசனான திருமங்கை ஆழ்வாருக்கு உபதேசித்த சீர்மை எவ்வளவு சொன்னாலும் போதாது. தான் பெற்றதோடு நில்லாது, அதை பிறர்க்கு உபதேசமாய் தந்த  பரகாலன் பனுவல்கள் 

தமிழ் நன்னூல் துறைகள் அஞ்சுக்கிலக்கணம் 

ஆரண சாரம் 

பரசமய பஞ்சுக்கு அனலின் பொறி 

என்றது  ஒருபோதும் அதிசயோக்தியாகாது.


திருக்கண்ணங்குடி 

திருநாகை 

திருப்புல்லாணி  (2)

திருக்குறுங்குடி (2)

திருவல்லவாழ் 

திருமாலிருஞ்சோலை (2)

திருக்கோட்டியூர்  

மங்களாசாசனம் இந்த 9 ஆம் பத்திலே அடக்கம். அதில் 


திருக்கண்ணங்குடி -> வாங்கமா முந்நீர் வரிநிறப் பெரிய வாளரவின் அணை மேவி  = சேஷசாயியான என்பெருமானைச் சொல்லுகிறது . இவ்வெம்பெருமான்  சிலகாலம் பிராட்டியை விட்டுப் பிரிந்து இருதாலும் இருப்பான்.  அனந்தனை விட்டுப் பிரிவதில்லை என்பதை புராணங்களிலே பார்க்கலாம். சீதை ராவண பவனத்தில் இருந்தபோது 10 மாதம் பிரிந்ததும், பிறகு வாலமீகி ஆஸ்ரமத்தில் விட்டபோது ராமன் அவளைப் பிரிந்த நாட்கள் உண்டு. ஆனால் லக்ஷ்மணன் ராமனை விட்டுப் பிரிந்த அடுத்த க்ஷணமே ராமனும் , பிரஜைகளுமாக சரயூ நதியில் இறங்கி தன்னுலகம் புக்கதும் ராமாயணத்தில் கண்டுவந்ததே.  

சென்றால் குடையாம் = வாமனாவதாரத்தில் , கிருஷ்ணாவதாரத்தில் 

இருந்தால் சிங்காசனமாம் = பரமபதத்தில் 

நின்றால் மரவடியாம் = நந்திகிராமத்தில் 

நீள்கடலுள் என்றும் புணையும் அணிவிளக்காம்  

பூம் பட்டாம், புல்கும் அணையாம்க்ஷீராப்தியில் 

என்று ஸர்வகால, ஸர்வதேச ஸர்வவித கைங்கர்யங்களையும் செய்யப் பெறுவதால் இவனுக்கன்றோ சேஷன் என்கிற திருநாமம் சாலப் பொருந்தும் . அந்த வகையிலே காரண ப்ரஹ்மம் சிருஷ்டிக்கு பூர்வ பாவியாக வடபத்ரத்தில் சயனித்த போது, ஆலிலையாக இருந்து ஸர்வத்தையும் வகிப்பவனை இவன் வகித்தபடியாலே ஆதி சேஷன்  என்றும் ஆனபடி

துளக்கமில் மனத்தோர் = கலக்கமில்லாத சிந்தையினர். அதாவது ஈஸ்வரனே உபாய, உபேயம் என்று இருக்கக் கூடியவர்கள். மறொன்றைக் கொண்டு எம்பெருமானைப் பெறுவதோ, அவனைக் கொண்டு மறொன்றைப் பெறுவதோ வேண்டாதவர்கள் என்றபடி.  

திருநாகை அழகியார் -> நாகரீகர், பெரிதும் இளையர் = இங்கு ஒரு செவிவழிச்ச செய்தி. இவ்வெம்பெருமான் நெற்றியில் திருமண் காப்பு மெல்லியதாக இருந்ததை பார்த்த ஒருவர் பளிச் சென்று பெரியதாக இடலாமே என்றதற்கு, அர்ச்சகர் சமத்காரமாக  சொன்ன விஷயம். நகரத்தில் உள்ளவர்கள் பகட்டாக நாமம் அணிவதில்லையே. இவரும் நாகரீகமானவர். பெரிதும் இளையர் என்ரூ ஆழ்வார் அனுபவம் அன்றோ? அப்படியான சிறுபிள்ளைக்கு மெல்லியதாக்கவன்றோ நெற்றியில் நாமம் சிறக்கும் என்பதாக பதில் அளித்தாராம். ஆழ்வார் ஹ்ருதயம் அறிந்து சொன்ன வார்த்தை அல்லவோ இது?


மஞ்சுயர் பொன்மலைமேல் எழுந்த மாமுகில் போன்றுளர் வந்து கண்ணீர் = காய்ச்சின பறவையூர்ந்து பொன்மலையின் மீமிசை கார்முகில்போல் - என்று நம்மாழ்வார் பேசியதை அடியொற்றி திருமங்கை ஆழ்வார் இப்படிச் சொல்ல, அதனை இரவல் வாங்கி கம்பநாட்டாழ்வானும் 

கருமுகில் தாமரைக்கு காடு நீடிருபுயதேந்தி ஏடவிழ் 

திருவுடன் பொலிய ஓர் செம்பொன் குன்றின்மேல் 

வருவபோல் கலுழன்மேல் வந்து தோன்றினான் 

-என்று பேசினார் 

திருப்புல்லாணி -> விஸ்லேஷ தசையில் பேறுகால நாயகி ஆற்றாமை மீதுற தான் அந்த புல்லாணி எம்பெருமானை நாடிச் செல்ல துணிந்தபோது, தனக்கு துரனையாக நெஞ்சையும், தோழியையும் அழைப்பதாக 10 பாசுரங்களை பாடினர். அப்படி சென்று கிட்டவும் சமன் இல்லாத ஆழ்வார் , பிறை , தென்றல் இவற்றால் வருந்தி தன் வேட்கையை பறவைகள் வழி தூது விடுகிறார் அடுத்து.

இவருடை மனது ஓரு காபுருஷன் பின்போ போயிற்று இல்லையே. அவன் எப்படிப்பட்டவன் என்றால் 

வில்லால் இலங்கை மலங்கச் சரம் துறந்து 

வல்லாளன் பின்போன நெஞ்சு = ஒன்றரை முகூர்த்த காலத்தில் 14000 ராக்ஷசர்களை  - ஏகஸ்ய ராமோ தர்மாத்மா கதம் யுத்தம் பவிஷ்யஸி - என்று ராமன் தனியொரு வீரனாக நின்று காற்றில் பூளைப்பூ சிதருவதுபோல் சிதரடித்த அவன் வீரமதனை அதிசயித்து சீதை புண்பட்ட மார்புக்கு ஒத்தடம் கொடுப்பதுபோல் - பர்த்தாநாம் பரிஷஸ்வஜே என்று ஆரத் தழுவிக் கொண்டாள் அல்லவா? அப்படிப்பட்ட வீரத்துக்கு தானும் தோற்று  பரகால நாயகியின் நெஞ்சானது அவன் இருக்குமிடம் நாடிச் சென்று விட்டது என்கிறார். மனது அங்கு சென்று விட்டதால், மனஸ் சககாரம் இல்லாத மற்ற இந்திரியங்களும் 

காணாக் கண் கேளா செவி என்னும் அளவாக அருகிருந்த தாயரும், தோழியரும் இவளை தேற்றி நல்வழிப்படுத்தச் சொன்ன எதுவும் இவள் காதில் விழவில்லை. அவர்கள் அதட்டலாக 

எல்லாரும் என்தன்னை  ஏசிலும் பேசிடினும் 

புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டிருந்த்தேனே! (9-4-5)

ராமன் தண்டகாரண்யத்தில் நுழைந்தபோது , அங்கு முனிவர்களும் யோகிகளும் - ஒரு ரிஷி ஜ்யோதியை தியானித்து இருக்க, இன்னொருத்தர் ஆகாசத்தை தியானிக்க, மற்றும் ஒருத்தர் பஞ்சாக்நி நிஷ்டராய் இப்படி இருந்த ஒவ்வொருத்தரும் 

தங்கள் தங்கள் காரியங்களை மறந்தனர் . சூரியனை தியானைத்தவர் ஹ்ருதயத்தில் இருந்து ஸூரியன் மறைந்தான். அக்நி தியானித்தவர் ஹ்ருதயத்தில் இருந்து அக்நி தேவன் மறைந்தான். ஆகாசத்தி தியானித்தவர் மனதில் இருந்து ஆகாசம் 

மறைந்தது. இப்படி அவரவர்கள் தியானத்துக்கு விஷயமாய் இருந்த தேவதாந்தரங்கள் மறைய,  ஒரு சுந்தர புருஷன் கையில் வில்லோடு ஜடாமுடியை தரித்தவனாய் மனதில் நிழலாட , அவர்கள் அதிசயித்து கண்ணைத்திறந்தனர். நேரிலே அதே வடிவத்தில் ராமனைக் கண்டார்கள். அப்படி ஹ்ருதயமான ஆரண்யகத்தில் ராமனைக் கண்டதும் , பும்ஸாம் திருஷ்டி சித்தாபகரணம் என்பதற்கு இணங்க, கண்டவர்கள் மனம் வழங்கக் கூடிய சுந்தர ராமன் அந்த வல்லாளன் பின் பரகால நாயகி நெஞ்சு போனதில் என்ன குறை

அந்த ராமனை 10 மாதம் பிரிந்து இருந்தாள் சீதை. என்பு முற்றியவள் அல்லவோ அவள்? அதுபோலே தாம் தூது விட்ட நாரையோ வேறோ அது திரும்பும் வரை தரித்திருப்பள் போலும் நம்மாழ்வாராகிற பராங்குச நாயகி. பரகால நாயகியோ க்ஷணகால விஸ்லேஷத்தையும் ஸகியாதவள் . இப்படியான தன்னுடைய வைலக்ஷண்யத்தை தானே சொல்லிக் கொள்கிறார் ஆழ்வார். நல்லார் அறிவீர்! தீயார் அறிவீர்! ஈதே அறியீர்நும்மடியார் எல்லோரோடும் ஓக்க எண்ணி இருந்தீர் அடியேனை - என்றிவ்வாறாக பரகால நாயகியுடைய நெஞ்சு புல்லாணி ஆதிஜெகந்நாதப் பெருமாளிடம் சென்றது, சென்றதாய் திரும்பவில்லை - என்கிறார்.  

எல்லாரும் என்தன்னை  ஏசிலும் பேசிடினும் 

புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டிருந்தேனே!

தன்னைத் தேற்றுவதாக, தாயரும், தோழியரும் சொல்லுமெதுவும் ஸத்யாம்சமே ஆனாலும் அதுதானால் தேறாத தன் உள்ளம் , புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டுத் தரிக்கும் என்றபடி


திருக்குறுங்குடி ->  ஆக்கும் புலியின் அதளும் உடையார் அவர் ஒருவர் பக்கம் நிற்க நின்ற பண்பர் = மிகப் பெரியவன்  தாழ்ந்தவனோடு பொறையற கலந்து பரிமாறுகை சீலகுணம் . அதற்கு ஏற்ப ரூபத்தாலும், குணத்தாலும் உயர்ந்த குறுங்குடி நம்பிவிரூபியாய் புலித்தோலும், த்ரிநேத்ரமும் விரசி , காரிய வர்க்கத்தில் சேர்ந்த சிவனுக்கு தன் அருகிலேயே சன்னதி அளித்திருக்கிற சௌசீலய  குணத்தைக் கொண்டாடி பண்பர் என்கிறார்.  


அதைப்போலவே திருவல்லவாழ், திருமாலிருஞ்சோலை எம்பெருமான்களையும் அனுபவித்து, திருக்கோட்டியூர் எம்பெருமானை வெள்ளியான், கரியான்,மணிநிற வண்ணன் என்பதாக அனுபவித்து இந்த பத்தைத் தலைக் கட்டுகிறார்



தசம சதகம் :

ஆழ்வார் அவதாரம் செய்து , திவ்யதேசத்து எம்பெருமான்களை எல்லாம் சேவிக்கவேணும் என்று ஆரம்பித்து திருக்கோட்டியூர் எம்பெருமான் வரை வந்து அனுபவங்களை செய்தவர் 
திருக்கோட்டியூரானை நீலமுகில் வண்ணனை நெடுமாலை இன்தமிழால் 
நினைந்த இன்நாலுமாறும் வல்லார்க்கு இடமாகும் வானுலகே (9-10-10)
என்று அனுசந்திக்க, அவனும் ஆழ்வாருக்கு பெருவீடு தந்தானாக இனி பரமபதம் ஏறப்போய் அவ்விடத்தில் கைங்கர்யம் என்ற அளவிலே, புதுமணப்பெண் பிறந்தகம் விட்டு புக்ககம் செல்லும்முன் எவ்வாறு அண்டையகத்தாருக்கும், அசலாகத்தாருக்கும்  பிரியாவிடை பெற்று செல்வாளோ அதைப்போல , இவரும் உகந்தருளின இடங்களில் எல்லாம் முகம் காட்டிச் செல்கிறார் என்பதாக சங்கதி. ஏரார் முயல்விட்டு காக்கைப்பின் செல்வரே? என்று இவர் திருவாக்கு இருந்தபடி இன்னும் பல திவயதேசங்களில் புக்குப் புறப்படுகிறார். இருக்கும் நாள் உகந்தருளின இடங்களிலே குணாநுபாவ கைங்கர்யங்களை  செய்துபோருகை என்பது இவ்வாழ்வார் செய்து காட்டிய நடையன்றோ? 
ஒருநல்  சுற்றம் -> சுற்றம் = சுற்றம் அல்லாதாரை சுற்றம் என்று வியாவர்த்திக்கிறது, க்ஷர்தர பந்து என்னுமா போலே .  நல் சுற்றம் = ஸ்வபிரயோஜனர்களான ஆபாச பந்துக்கள். ஒருநல் சுற்றம் = ஸர்வ வித பந்துவாய் இருக்கிற எம்பெருமான்.
மாதா நாராயண: பிதா நாராயண: ப்ராதா நாராயண: ஸர்வம் ஸுக்ருது நாராயண: என்பதை 
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன்மக்களும் மேலாத் தாய்த்தந்தையரும் எல்லாம் இனி நமக்கவரே ஆவாரே - என்றார் நம்மாழ்வார் ஸாதித்ததை போல தாய் தந்தை ஆக முடியாது. தந்தை தாயாக முடியாது. ஆனால் ஈஸ்வரன் இருவருமாய் ஒரே  சமயத்தில் ஆக கூடியவன் அல்லாவா? இதையே, ஈஸ்வரனை ஒழிந்தவர்கள் ரக்ஷகர் அல்லர் - என்று ஸ்வாமி பிள்ளை லோகாச்சார்யரும்  பேசுவர். பிராப்பிய பூமியை கொடுப்பவனும், பிராப்பியமாகவும் இருப்பவன் அவனே. 
எனக்குயிர் = ஆத்தமாவாய் இருப்பவன். ஞானி  து ஆத்மைவ மே மதம் என்று அவன் நினைவு.  
ஒண்பொருள் = புருஷார்த்தமும் அவனே. சேமநல வீடும் , பொருளும், தருமமும் சீரிய நற்காமமும் நான்கென்பர் , நான்கினும் கண்ணனுக்கே ஆமது காமம், அறம், பொருள், வீடு இதற்கென்று உரைத்தான் வாமனன் சீலன் ராமனுசன் - என்பகிற அமுதனார் திருவாக்கு நோக்குக. 
வருநல் தொல்கதி = சரீரத்தைவிட்டு அர்ச்சிராதி கதியைப் பிடித்து விரஜையில் குளித்து அவனைக் கிட்டி அடைகிற ஸ்வரூப ஆவிர்பாவம் அளித்தால் இவை எல்லாம் அளிப்பவன் 
ஆகிய மைந்தன் = மிடுக்கன். யுவா குமாரஸ்ச என்றும் இளையவன். பும்ஸ்சத்வத்தோடும் இவையெல்லாம் அருளக்கூடிய ஸர்வ ஸக்தனாகவும் இருக்கக் கூடியவன். யார் என்றால் 
நெருநல் கண்டது நீர்மலை = நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் மாமலையாவது நீர்மலையே. 
நின்ற நீர் வண்ணன் -> ஒருநல் சுற்றம். 
இருந்த ந்ருசிம்மன் -> எனக்குயிர். 
கிடந்த ரங்கன் -> ஒண்பொருள்.
நடந்த வில்லி = வருநல் தொல்கதி. அவனையே 
கருநெல் சூழ் = எப்படி நித்ய முக்தர்கள் , எம்பெருமானைப் போலவே பஞ்சவிம்சதி வார்ஷிக : என்று ஸதா 25 வயது நிறைந்த யுவாக்களாக இருப்பார்களோ , அதுபோல பால் பிடித்து, சூல் விட , விட்டுக் கொண்டிருக்கிற நெல் வயல்களால் சூழ்ந்த - 
கண்ணமங்கையுள் காண்டுமே - என்று பதிகத்தில் உள்ள பாசுரம் தோரும் இரண்டு இரண்டு திவ்யதேசங்களை
அனுபவிக்கிறார் ஆழ்வார்.  ராஜ குமாரர்களுக்கு பிடி சோறு தோறும் நெய் சேர்க்குமாப் போலே , இவ்வாழ்வாருக்கு அடிதோறும்  அர்ச்சை அனுபவம். அதுவும் இரட்டைப் படித்தனமாகச் செல்கிறது. 
முதலாழ்வார்கள் மூவரும் பரத்வத்திலே ஊன்றி இருப்பார்கள். 
திருமழிசை ஆழ்வார் - அங்குஷ்ட மாத்திரை புருஷ: யோ ஆத்மநி திஷ்டந் - என்று அந்தர்யாமித்வத்தில் ஊன்றி இருப்பர். 
நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாளும் கிருஷ்ணாவதாரத்தில் ஊன்றி இருப்பார்கள். 
குலசேகர ஆழ்வார் குஷ்யதே யஸ்ய நகரே ரங்க யாத்ரா தினேதினே என்று நம்பெருமாள் வேறு இராமன் வேறு என்று பாவியாது இராமாவதாரத்திலே ஊன்றி இருப்பர். 
தொடரடிப் பொடியாழ்வார் - அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே என்றும் 
திருப்பாணாழ்வார் - என் அமுதனைக் கண்ட கண்கள் மறறொன்றினைக் காணாவே என்னும்வகை இவ்விருவரும் அர்ச்சா விசேஷமான திருவரங்கம் பெரிய பெருமாளிடம் விரகராய் இருப்பார்கள் என்றால் , திருமங்கை ஆழ்வாரோ அர்ச்சா ஸாமான்யங்களாகிற அவ்வெம்பெருமான் உகந்தருளிய நிலங்களிலே பிரவணராய் இருப்பர். 

அடுத்து திருப்பேர் நகர் மற்றும் திருவெள்ளறைப் பாசுரம்.
துளக்கமில் சுடர் = ஒளி குன்றாத சுடர் . ஆத்மாவை தீபத்துக்கு ஒப்பிடுவது உண்டு. காரணம் தீபம் தன்னைக் காட்டி, அருகில் இருக்கிற பதார்த்தங்களையும் காட்டிக் கொடுக்கும். அதுபோல ஸ்வபிரகாசகமாய், ஸ்வஸ்மை பிரகாசகமாய் இருப்பது ஆத்மா. அதுதான் தர்மிபூத ஜ்ஞானம். தர்மபூத ஜ்ஞானம் என்று பார்க்கிறோம். பிரத்யக் பதார்த்தங்களான ஜீவனுக்கும், ஈஸ்வரனுக்கும் , இவை இரண்டும் பொதுவானாலும், ஜீவாத்மாவுடைய தர்பூத ஜ்ஞானம் பத்த தசையிலே மழுங்கி, முக்த தசையிலே இயல்பு நிலையை அடைகிறது. அப்படி இல்லாமல் எம்பெருமானுடைய ஜ்ஞானம் பூர்ணமானது. எப்போதுமே, அவனுடைய அவதார காலத்திலும், துளக்கமில்லாதது ஒளி குன்றாதது. நித்யர்களுக்கும் துளக்கமில் ஜ்ஞானம்தானே என்றால், அவர்களுடைய தர்மிபபூத ஜ்ஞானம் அணு. தர்மபூத ஜ்ஞானம் விபு , முக்தாத்மாவைப் போல . ஆனால் ஈஸ்வரனுக்கோ ஸ்வரூபதயா , ஸ்வபாவதயா விபுத்வம் சொல்லப்படுகிறது. 
அளப்பில் ஆரமுது = ஆனந்தோ ப்ராஹ்மணோ வித்வான் என்று ப்ரஹ்மத்தினுடைய ஆனந்தத்துக்கு - யாதோ வாசோ நிவர்த்தந்தே அபிராப்பிய  - என்று வேத புருஷனே முயன்று கை ஓய்ந்தானாக,  அளவிறந்தது. நித்ய, நிர்மல ஆனந்தத்வம் அவனுடையது. பாற்கடலில் வந்தது உப்புச் சாறு. அவனோ அமுத்தினில்  வரும் பெண்ணமுது உண்ட அளப்பில் ஆரமுது . அபரியாப்தாம்ருதம் .

விபவாவதாரமான ராமாவதாரத்தில் ஈடுபாட்டு -> கோன்வஸ்மிந் ஸாம்பரதம் லோகே கஸ்ய வீர்யவான் - என்று அவனுடைய 16 குணங்களில் முதலாவதாக எண்ணப்பட்ட வீரத்துக்குத் தோற்று,  அவனுடைய விஜய ஸ்ரீ ; யைக் கொண்டாடி ராக்க்ஷஸர்கள் சொல்லும்  தடம் பொங்கத்தம் பொங்கோ என்கிற சப்தங்களை அனுகரித்து  பாசுரமிடுகிறார். இவ்வாழ்வார் ஏனைய ஆழ்வார்களிலும் விலக்ஷணமானவர் என்பதை ஆணான தன்மையில் திருவழுந்தூர் எம்பெருமானிடம் ஊடியதைக் கொண்டு பார்த்தோம். ஊராதொழிவன் மடல் என்று மடல் எடுத்ததும் பார்த்தோம். இப்போது பகவத் விரோதிகளான ராக்ஷர்களை அனுகரித்து  - ராமன் சத்ரு சைன்ய பிரதாபன் - என்பதை நிலை நாட்டுகிறார். 
தடம் பொங்கத்தம் பொங்கோ - தடம் = ஓத்தது. ராமன் கையால் தங்களுக்கு ஏற்பட்ட பரிபவம் (அ ) தோல்வி ஒக்கும் என்று சரணாகதர் ஆகுமத்தைப் பாடுகிறார் ஆழ்வார். ஜெயித்தவர்கள் விஜயத்தை கொண்டாடும் வார்த்தை நாவலோ நாவல்! என்பது. அதுபோல தோற்றவர்கள் உயிர் பிழைக்க செய்கிற சங்கேத கோஷம் தடம் பொங்கத்தம் பொங்கோ ! என்பதாக. 
பத்து நீள்முடியும் அவற்றிற்ரட்டிப்  பாழித் தோளும் படைத்தவன் செல்வம் 
சித்தம் மங்கையர்பால் வைத்துக் கெட்டான் (10-2-2) = ராவண பவனத்தில் சிறை வைக்கப்பட்ட பிராட்டி உபதேசிப்பதற்கு முன், பெருமாள் சொன்ன கடற்கரை வார்த்தை - 
ஆநயேநம் ஹரிஸ்ரேஷ்டம் தத்தமஸ்யாபயம்
விப்பீஷணோவா ஸுக்ரீவா! யதிவா ராவண ஸ்வயம்  
-என்று சரணாகதனாக வந்தவனை கைவிட மாட்டேன் . அவன் விரோதியானாலும் சேர்த்துக் கொள்வேன் என்றான். 
அத்ரிக்க்ஷ கத ஸ்ரீமாந் ! என்று வந்த விபீஷணனிப் பார்த்து அங்கதன், நளன், நீலன், மைந்தன் அனைவரும் அடி, குத்து, கொல்லு  என்றனர். ஸுக்ரீவன் அவன் பொல்லாவரக்கன் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்றான். ஹநூமான் அவன் நல்ல வரக்கன் சேர்த்துக்கொள்ளலாம் என்றார். ராமன் அவன் பொல்லாதவனேயானாலும் சேர்த்துக் கொள்வேன் என்றான். ஆனால் பிராட்டியோ மித்ர ஒளபயிதும் கர்த்தும் , யதி ஸ்தானம் ப்ரதீப்ஸசி - என்று ராமன் காலைப் பிடிக்கவேண்டாம். கைகுலுக்கினால் போதும் என்றாள் .  ஆனாலும் தலைவணக்கமில்லா அவன் பட்டுப் போனான். 
ஒத்த தோள்  இரண்டும் ஒரு முடியும் ஒருவர்தம் திறத்தோம் அன்றி வாழ்ந்தோம் (10-2-2) = அந்த விபீஷணனைப்போல் ராம கோஷ்டியில் சேராது கெட்டோம் . வாழ்ந்தோம் என்பது ஆஸ்ரயஸியாகிற அக்நியைப் போல், சித்தம் மங்கையர்பால் வைத்துக் கெட்டவன் பக்கல் நின்று (நாங்களும்) கெட்டோம் . எம்பெருமான் எம்மைக் கொல்லேல் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ! என்று அவர்களில் ஒருவராக தம்மை இணைத்துக் கொண்டு ரக்ஷணத்தில் தீக்ஷித்தவனுடைய இரக்கத்துக்கு நிலமாகிறார். 
இப்படிப்பட்ட ராமனுடைய ஜெயத்தை யாரெல்லாம் எங்கும் பாடிநின்று ஆடுவார்களோ, அவர்களுக்கு இம்மையில் இடரில்லை,இறந்தால் கிட்டுவதும் பரமபதம் என்று பலன் சொல்லி முடிக்கிறார் பதிகத்தை. 
ஏத்துகின்றோம் நாத்தத்தழும்ப (10-3-1) = ஜெயித்தவர்களுக்கு ஒரு தடம் பொங்கத்தம் பொங்கோ என்றால் தோற்றவர்க்கு ஒரு குழால் கூத்து இப்பதிகம். நாக்கு தடித்துப் போகும்படியாக ராமன் திருநாமத்தை ஏத்துகின்றோம். சுக்ரீவா! நீ அந்த ராமனுக்கு அணுக்கன் அல்லவோ? உம்மை முதலில் தொழுகின்றோம். உம்முடைய வார்த்தையால் நாங்கள் பிழைத்தோம் என்றாகும்படியாக 
வார்த்தை பேசீர் எம்மை உங்கள் வானரம் கொல்லாமே 
கூத்தார்போல் ஆடுகின்றோம் குழுமணி தூரமே. (10-3-1)
என்று இப்படி சுக்ரீவனை விழித்துச் சொன்ன பாசுரங்கள் ஒன்றும், ஒன்றுமாக இரண்டு. மற்ற வானர முதலிகளைப் பார்த்து சொன்ன பாசுரங்கள் ஐந்து. உபசேசபரமாக சொன்ன பாசுரங்கள் மூன்று என்று 10 பாசுரங்கள் 
பாடிநின்றாடுமினே = இதற்கு வேறு எந்த பலனையும் கூறாமல், ஸ்வயம் பிரயோஜனமாய் பாடிநின்றாடுகையே பலம் என்றபடி.  
இதற்குமேல் 7 பதிகங்கள் கிருஷ்ணாவதார அனுபவம் ஆழ்வாருக்கு. அதிலும் மானமுடைத்து என்கிற பதிகம் (10-7-1) 14 பாசுரங்களோடு கூடியது. கண்ணன் செய்யும் தீம்புகளை ஆய்ச்சியாரும், யசோதையும் முறையிடுவைத்து குறித்து எழுந்த பாசுருங்கள்தாம் இவை. 
10-4- கண்ணனை அம்மன் உண்ண அழைத்தல்.அவன் பால் சாப்பிட்டதைச் சொன்னால் நாம் பிராந்து பால் குடிக்க வேண்டாம். 
10-5- சப்பாணிப் பருவத்தில் கை கொட்டி விளையாடக் கூறுதல். பல ஸ்ருதி சொல்லாத பதிகம். 
செந்தாமரைக் கண்ணா! தண்துழாய் தாராளா கொட்டாய் சப்பாணி தடமார்வா கொட்டாய் சப்பாணி - என்று கண்ணனெம்பெருமான் சப்பாணி கொட்டுவதை செப்புவதே பலனாக வேறு ஒரு பலனைச் சொன்னார் இல்லையாம். 
10-6- எங்கானும் ஈதொப்பதோர் மாயம் உண்டே? = இதற்கு முன் இரண்டு பதிகத்தில் ஏறிட்டுக் கொண்ட பெண்பாவம் போய் தானானதன்மையிலே, மற்றைய அவதாரங்களின் மேன்மையும், கிருஷ்ணாவதாரத்தில் எளிமையும் அனுபவிக்கிறார் ஆழ்வார். அவன் வெண்ணை உண்டு ஆப்புண்டிருந்தத்தைக் கூறினால், நம்முடைய பிறவித் தளை ஓயும். அவன் வெண்ணை களவாடினான் என்பதைக் கூறினால் நம்முடைய பாபங்கள் திருடப்படும். 
நரநாராணனாய் உலகத்து அறநூல் சிங்காமை விரித்தவன் = சாஸ்த்ரங்களைக் கொடுத்து, ஜகத் ஸ்ருஷ்டி, ஸ்திதி, லய வியாபாரங்களை செய்கிற மென்மையாளன் அன்றோ இன்று அளைவெண்ணை உண்டு ஆப்புண்டிருந்தது ? நவநீதத்தில் அவனுக்கு ஏன் அததனைப் பிரியம் என்றால், அது அளை வெண்ணை = ஆஸ்ருத்த கரஸ்பர்சம் பட்ட வெண்ணை என்பதாலே. ஒன்று மேன்மைக்கு எல்லை நிலம்.  மற்றொன்று எளிமைக்கு எல்லை நிலமாய இருந்து காட்டுவதும்,  அவனுடைய எளிமை கண்டு பற்றுகைக்கும்,  மேன்மை கண்டு காரியம் செய்யம் என்று துணித்திருக்கைக்கும் உருப்பாகும் என்று. இந்த      
கலியன் ஒலிசெய் தமிழ்மாலை வல்லார்   
என்றானும் எய்தார் இடர், இன்பம் எய்தி 
இமையோர்க்கும் அப்பால் செல எய்துவாரே (10-6-10)
- பிறவித் துயர் அற்று நிரதிசய ஆனந்தத்தை பெற்று பரமபதத்தைப் பிராப்பிப்பர் என்கிறார்.  
மானமுடைத்து உங்கள் ஆயர் குலம் (10-7-1) = வெண்ணையைத்தான் திருடி சாப்பிட்டான் என்பதில்லை, ஆய்ப்பாடி கன்னியரையும் களவு கண்டான். அவன் செய்யம் தீம்புகள் வாயால் சொல்லும் படியும் இல்லை. தடுக்கவும் முடியவில்லை.
படிறன் படிறுகளுக்கு என் செய்கேன்? என்செய்கேனோ? என்று ஆழ்வார் பாடப்பாட , பாசுரங்களின் எண்ணிக்கையம் வழக்கத்தை விட அதிகமாய்  14 என்றாகி, முடிக்க விருப்பம் இல்லாமல் முடித்தார் போலும்? 
10-8 காதில் கடிப்பிட்டு = கண்ணன் பல பெண்களைக் களவாடினான் என்று பார்த்தோம். அதில் ஒருத்தி விஸ்லேஷ தசையில் கண்ணனோடு ஊடுவதைச் சொல்லும் பதிகம். 
நம்மாழ்வார் மென்மையானவர். அவருடைய ஊடல் - கடியேன், கொடியின் , ஆகிலும் அவனென்றே கிடக்கும் என்மனம் எல்லே! - என்பதாக வன்மையாக இருக்கும்.  மின்னிடை மடவார் பதிகத்தில் - என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!கழகம் ஏறேல் என்று காதவடைத்துத் தள்ளுகிறார். 
குலசேகர ஆழ்வார் ராஜாவானபடியாலே, அவருடைய ஊடல் ராஜகுல மாஹாத்மியத்தோடே இருக்கும்.
திருமங்கை ஆழ்வாரோ வன்மையானவர். ஆனாலும் இவருடைய ஊடல் பாசுரங்களில் மென்மையும், இனிமையும் தோற்றும். 
ஆய்ப் பெண் ஒருத்தியிடம் இன்னபோது வருகிறேன் என்றுசொல்லி தன்னை அலங்கரித்துச் செல்ல வேண்டும் என்பதற்காக , பலதும் மாற்றி மாற்றி அணிந்து ஒத்திகை பார்த்து புறப்பட்டதால், காலம் தாழ்த்தி வந்தான். வந்தவன் ஒதுங்கி, ஒதுங்கி நின்று சமயம் பார்த்து அவள் கையைக், காலைப்  பிடித்து சேர வேண்டும் என்கிற எண்ணத்தோடு அவள் கண்பட புறம்பே நின்று பார்ப்பதை ஆழ்வார் 
போது மறுத்து, புறமே வந்து நின்றீர் 
ஏதுக்கு இதுவென் ? இதுவென் இதுவென்னோ ?  
என்று பொய்க்கோபம் பேசுகிறார். அடுத்து 
10-9- புள்ளுருவாகி நள்ளிருள் வந்த = கண்ணனைப் பிரிந்து தன் பெண் படும்பாட்டைக் கண்டு, தாய் அவளுக்கு இரங்கி தலைவனை வேண்டுவதாக அமைந்த பாசுரங்கள். 
பாட்டிவைப் பாட பத்திமைப் பெருகி சித்தமும் திருவொடு மிகுமே (10-9-10) = பரம பக்தி தலையெடுத்து, தோட்டலர் பைந்த்தார்ச் சுடர் முடியானுக்கு செய்கிற கைங்கர்யமாகிற  ஸ்ரீ யை - கைங்கர்யமாகிற லக்ஷ்மியைப் பெறுவர்கள் - என்கிறார். 
10-10- திருத்தாய் செம்போத்தே! = அப்படி தாயார் வேண்டியும் தலைவனோடு கூடப்பெறாத பெண், ஆற்றாமை மிக,  
திருத்தாய் செம்போத்தே 
கரையாய் காக்கைப் பிள்ளாய் 
கூவாய் பூங்குயிலே 
கொட்டாய் பல்லிக் குட்டி 
சொல்லாய் பைங்கிளியே 
கோழி கூவென்னுமால் - 
ஜாம கோழியை மடியில் கட்டிக் கொண்டு போய் , பேசி அளவளாவிக்கொண்டு இருக்கும்போதே அதனைக் கூவ விட்டு தான் புறப்பட்டுப் போய்விடுவனாம் . அந்த அவசர கதியிலாவது தன் இல்லம் தேடி வரமாட்டானா என்பதாக கண்ட கண்ட பறவை, பக்ஷிகள் காலில் விழுந்து . தன் தலைவன் வரவைக் கூறும்படி அவைகளை வேண்டுவதாக அமைந்த பதிகம். 
கொங்கார் சோலைக் குடந்தைக் கிடந்த மால் 
இங்கே போதுங்கொலோ? (10-10-8) என்று சொன்னவள்அடுத்து 
பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை 
இன்னார் என்றறியேன் (10-10-9)
என்கிறாளே - வந்தவன் தேவனைப் போல ஆழியும் மனுஷ்யரைப் போல வில்லும் பிடித்த திருக்குடந்தை ஆராவமுதன் என்பதை தெரிந்தும் தெரியாதாவள் போல் சொல்கிறாளே ? என்றால் கண்டும் காணாதவள்போல் பிரணய ரோஷத்தில் 
முகம் திருப்ப எண்ணம் போலும் பேச்சு. 
தொண்டீர் பாடுமினோ! தொண்டீர் பாடுமினோ! என்று சொன்ன ஆழ்வார், பாடுகைக்கு பலம் ஒன்றும் சொல்லவில்லையே என்றால், ஸ்வயம் பிரயோஜனமாய் பகவானைப் பாடுவதிலே சபலம் உடையவர்கள் அனைவருக்கும் பாடுவதே பலனாகக் கொள்ளக் கடவது.  

ஏகாதச சதகம் :

இதுவரை அஸந்நேவ என்றிருந்த திருமங்கை மன்னனை  ஸந்தமேநம் என்று திருமங்கை ஆழ்வாராக்கிய ஆக்கிய உய்வதோர் பொருளை ஆழியான் அருளை இன்தமிழ் இன்னிசை பாசுரங்களாக இயற்றத் தொடங்கி தம்மை உய்வித்த எட்டெழுத்தில் முதல் எழுத்தான அகாரத்தின் விவரணமான நாராயண நாமத்தை ஒருமுறை நவின்று திருப்தி அடையாமல் ஒன்பதுமுறை வாடினேன் வாடி என்கிற முதல் திருமொழியில் வெளியிட்டருளினார். அவனைக் குறித்த 1000 நாமங்களில், அவன் ஒருவனுக்கே உரித்தான அசாதாரண நாராயண நாமத்தின் பாவநதத்வதிலும் , சாதனத்தவத்திலும் இழியாது போக்யத்வத்தில் இழிந்து அனுபவிக்க அவனுடைய வானவர் நாடான நித்ய விபூதியில் பல்லாண்டு பாடப் புகாது , லீலா விபூதியிலும் நான்முகனார் பெற்ற நாட்டுளே வேறெங்கும் செல்லாமல், இவ்விரண்டுக்குக்கும் மேற்பட்ட அவனுக்கு அசாதாரணமாத திகழும் உகந்தருளின நிலங்களிலே தனக்கேற்கும் கோல மலர்ப் பாவையோடு ஆங்காங்கு கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் அர்ச்சா மூர்த்தியை மங்களாசாசனம் செய்ய ஒருப்பட்டு 2 முதல் 91 ஆம் திருமொழி முடிய 51 திருத்தலங்களை முழுப்பதிகங்களாகவும், மேலும் 23 திவ்யதேசங்களை தனிப் பாடலாகவும் மங்களாசாசனம் செய்தருளுகிறார். மற்ற 5 பிரபந்தகளில் ஏனைய 12 திவ்யதேசங்கள் தனிப் பாடல் பெறுகின்றன. 92, 93 திருமொழிகளில் பொங்கத்தம் போங்கோ ! குழுமணி தூரம் ! ஆகிய இரண்டு பதிகங்களால் ராமபிரானுடைய வெற்றிக் கொண்டாட்டத்தையும் , 94 - 98 முடிய உள்ள திருமொழிகளால் முறையே 
யசோதை கண்ணனை அம்மம் உண்ண அழைத்தல்;
சப்பாணி கொட்ட வேண்டுதல்;
பிற அவதாரத்தோடு கண்ணனின் அவதாரத்தில் எளிமையை அனுபவித்தல் ;
கண்ணனின் சேவையைக் குறித்து யசோதை உரைத்தல்; ஆய்ச்சியர் முறையிடுதலும்;
ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு கூடி உரைத்தலும்;
99 ஆம் திருமொழியால் பரகாலநாயகிபால் எம்பெருமான் உதாசீனனாக இருக்கும் இருப்பு அவன் பெருமைக்கு தக்கதன்று என்று தாய்  வெறுத்து பழமொழிகள் கொண்டு பேசுமத்தையும் சொல்லிற்று.. 100 வது திருமொழியில் மகள் பேச்சாக எம்பெருமான் வரவை பறவைகள் ஒலிஎழுப்ப வேண்டினாள்.

அடுத்து உள்ள 101 - 108 வரையான பதிகங்களின் பதபதார்த்தம், விசேஷார்த்தம் பற்றி சிறிது சிந்த்திப்போமாக. அவற்றுள் 
101 -103 வரையிலான திருமொழிகளில் பொதுவாக எம்பெருமான் பிரிவினில் வாடும் தலைவியின் ஆற்றாமையை, கீழே தாய் பாசுரமாக சொன்னது, இங்கு மக்கள் பேச்சாக வளர்கிறது. 
குன்றமொன்றெடுத்து = இயல்பாக குளிர்ச்சியாக இருக்கிற தென்றல் தீயாக சுடுவதன் காரணம் அந்த எம்பெருமான் இட்ட கட்டளையோ ? என்று அனுமானித்து அதற்கு பிரதியாக தான் செய்யக்கடவது ஏதும் இல்லையே ? இந்திரன் பாசிக்கோபத்தில் விர்ஷித்த குளிர் மழையிலிருந்து ஆயரும், ஆநிரைகளும் தாமே தம்மை ரக்ஷித்துக் கொண்டு இருந்தால் அல்லவோ, நாமும் நம்மை ரக்ஷித்துக் கொள்வது? காசையாடை மோடியாடி காதல் செய்வான் ஒருவன், அவனை பிராட்டி சபித்து நீறு செய்து மீண்டு வரும் செயலில் ஈடுபட்டிருந்தால்  அல்லவோ நாமும் நம்மை ரக்ஷித்துக் கொள்வது ? என்று அலமருகிறாள். 
காரும் வார்பனி = ஈரமான காற்று துரபிமானிகளுக்கு போக்யமாய் குளிர்த்திருக்கலாம். ஆனால் எம்பெருமான் தோளும், தோள்மாலையும் கண்டவர்க்கு அது அவன் இட்ட தண்டனையோ? இயல்பாக அழியாக் கூடிய தேகத்தை வதைக்காதே, வெட்டவோ, நினைக்கவோ, உலர்த்தமுடியாத உயிர்க் கொலையாக வன்னோ இது நலிகிறது  என்கிறாள். 
சங்கும் மாமையும் = பிரிவினால் நலிவேனை வானத்து சந்திரனும் வருத்துகின்றதே? மேனி தளர்ந்து கைவளைகள் கழல, பசலை நிறம் பூணுகின்றதே ? விலக்கப் பார்த்தால், கடல் நிற வண்ணர் கழுத்தில் மாலைகள் வாவென்று கூவுகின்றவே ? 
அங்கோர் ஆய்குலம் = எல்லில் பிழைத்து ஆய்ப்பாடி சென்றவன் தாயுருவில் வந்த பேய் நஞ்சுண்டான். செய்கையோ திங்கள் வெங்கதிர் சீறுகின்றது ?
ஆங்கோர் ஆளரியாய் = தூணைப் பிளந்தவன் மார்பைப் பிளந்தான் வீரம் இதுவோ?  மாகடல் மதியம் வாங்கியதும் நம்மை இடர்ப்பவோ? அதுகண்டு கடலும் கனிந்து புலம்புகின்றதே? 
சென்று வார்சிலை வளைத்து = அன்று சீதா பிராட்டியின் தனிமை தீர்க்க இலங்கைவரைச் சென்று காட்டிய வீரம் எங்கு போயிற்றோ? இன்று  முளரிக் கூட்டில் அன்றில் கலவியில் எழுப்பும் ஒலி என்னை அடரும் வகை விட்டனனே? 
பூவை வண்ணர் = கருட வாகன நம்பியைக் காண்டதும் என்பிழையோ? காமன் கணைகள் என் ஆவியே இலக்காக உலுக்குகின்றதே? 
மால் இனந்துழாய் = திருமால் திருமேனியில் உள்ள ஒவ்வொன்றும் நெஞ்சில் நிழலாட, அவன் மார்பில் தவழும் துழாய் அதனை என்பால் கோலவாடை கொண்டு வந்து நலிய காப்பதரிதாயினவாறே உண்டு ஓர் உபாயம் என்று 
கெண்டையொண் கண் = மிக்கசீர்த் தொண்டர் இட்ட பூந்துளப வாசமே வண்டு கொண்டு வந்து வண்டு ஊதுமாகில் மணிமாமையும், உறக்கமும் பண்டுபோல் பெறலாவது என்கிறாள். 
தொண்டர் = அல்ப, அஸ்திரமான பலன்களை வேண்டும் அன்ய பிரயோஜனர்.
சீர்த்தொண்டர் = பகவத் பக்தி பிரயச்சமே என்று உயர்ந்த புருஷார்த்த நிஷ்டர்.
மிக்க சீர்த் தொண்டர் = 
கள்ளார் துழாயும் கணமலரும் கூவிளையும்   
முள்ளார் முரளியும் ஆம்பலும் முன் கண்டக்கால் 
புள்ளாய் ஓர் ஏனமாய்  புக்கிடந்தான் பொன்னடிக்கு (11-7-6)
-- என்று பராங்குச, பரகால, யதிவராதி கோத்ர, சூத்ர, பிரவர அனுஷ்டாதாக்கள் கரஸ்பர்சமுடைய பகவத் பிரசாதத்தை கொண்டுவந்து கொடுக்க தன் வாதை தீருமே என்பது ஆழ்வார் திருவுள்ளம். 
இப்படியாக,  இவ்வாழ்வாருடைய இந்த பதிகத்தைப் சொல்ல வல்லாருக்கு, தனக்குற்ற வல்லல் இவையொன்றும் இல்லையே என்கிறார் போலும். 

குன்றமெடுத்து = இதற்கு முன் பதிகத்தில் சொன்ன ஆற்றாமைக்குப் பரிகாரம் காணாதே வருந்திக் கூறும் பாசுரங்கள் இதிலும் தொடற 
மஞ்சுறு மாலிருஞ்சோலை = ஸம்ஸலேஷித்த நாட்களில், பொழுது பார்த்து புலர்ந்த வெஞ்சுடர் இன்று பிரிவில் எங்கு போய் ஒளிந்ததோ? ஏங்கி இளைத்த என் உடலம் இருந்து துன்புறுவதைக் காட்டிலும், நஞ்சு முடிந்தால் நமக்கு இனி நல்லதே என்று முடியும் வகையும் அறியாது , எதற்கும் அவன் அருள் வேண்டுமே என்று எண்ணி , ஸ்வாமியானவன் தானே வந்து கைக்கொள்ளும் வரை நம் பெண்மை சிந்தித்திராது என்று துணிந்து 
காமன் கணைக்கு =  
தூமலர் நீர்கொடு தோழி! நாம் தொழுது ஏத்தினால் 
கார்முகில் வண்ணனை கண்களால் காணலாம் கொலோ? (11-2-9) 
- விதிவத்தான பூசனைகளால் கண்களார அவனைப் கண்டு பெறலாம் அல்லவோ என்று பிராப்பியத்துக்கு விரகரை துணை கொள்ளுகிறாள். 

மன்னிலங்கு பாரதத்து = இப்பதிகம்  அந்தாதித் தொடையாகச் செல்லுகிறது. பொழுது புலரவே, எம்பெருமான் தான் கூடியிருந்த காலத்தில் உன்னைப் பிரிந்து எமக்கோர் வாழ்முதல் உண்டோ என்று தன் மையலைக் காட்டினவன் தூரஸ்தனாய் இன்னும் வாராமை கண்டு, அவனை விரைந்து அடைய தலைவி விடாய்த்து கூறுவதாக பாசுரம் இடுகிறார் ஆழ்வார். 
ஆஸ்ருத ரக்ஷிணார்த்தமாக பாரதப்போர் நடாத்தியவன், இந்திரனுடைய ஐச்வர்யத்தை மீட்டவன், தன் தேவிக்காக தென்னிலங்கை ஈடழித்தவன் இன்று எனக்கு இன்முகம் காட்டானாய் 
என்னிலங்கு சங்கோடு எழில் தோற்றிருந்த்தேனே ( 11-3-1) என்று சொல்லி அறத்தொடு நிற்றமையைப் பேசுகிறார். 
இத்திருமொழியை கற்றார் முற்றுலகாள்வ தன்றி 
கேட்கல் உற்றார்க்கு உறுதுயர் இல்லை உலகத்தே (11-3-10) என்று வக்தா, ஸ்ரோதா இருவருக்கும் பலன் சொல்லி முடிக்கிறார். 

ஆஸ்ருத ரக்ஷணம், விரோதி நிரசநம் அதற்காக எம்பெருமான் எடுத்த 10 அவதாரங்களை வரிசைப்படுத்திப் பாடுகிறார் நிலையிடம் எங்கும் இன்றி நெடுவெள்ளம் (11-4-1) என்று தொடங்கும் அடுத்து பதிகத்தில். இது போன்ற அனுபவம் திருவழுந்தூர் பதிகத்தில் 
(7-8-1) பேசப்பட்டாலும், 
காரிய வைகுந்தம்- க்ஷீராப்தி, ஹயக்ரீவாவதாரம், ஹரி என்கிற கஜேந்த்திர விருத்தாந்தம், வராகாவதாரம்,  நிருசிம்மாவதாரம், வாமனவதாரம், இராமாவதாரம், கிருஷ்ணாவதாரம், பன்றியாய், மீனாகி, அரியாய் என்கிற 10 ஆம் பாசுரத்தில் மச்சாவதாரம் என்று அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சொன்னவர், இந்த 104 திருமொழியில் அவைகளையே முறையாக சொல்லுமிடத்து, பலராமவதாரத்தை விடுத்து 
அன்னமதாய் இருந்து அங்கு அறநூல் உரைத்த (11-4-8) ஹம்ஸாவதாரத்தைச் சிறப்பிக்கிறார் ஆழ்வார். 
  
மேற்பட மானமரு மென்நோக்கி (11-5-1) என்கிற பதிகம் சாழல் பாடல் வகையைச் சேர்ந்தது. இதில் தோழியர் இருவர் இகழ்வதும் புகழ்வதுமாய் எம்பெருமான் எளிமையும், மேன்மையும் பற்றி எதிரெதிராகக் கூறிக் கொள்கின்றனர். அந்தவகையில்   
பார்மன்னர் மங்கப் படைதொட்டு வெஞ்சமத்து (11-5-8) என்கிற பாசுரத்தில்  
தேர் மன்னர்க்காய் அன்று தேர் ஊர்ந்தான் - என்பதாக சௌலப்பிய பராகாஷ்டையில் நின்று ''மாம்'' என்று தொட்டுக் காட்டின 
சேனா தூளி தூசரிதமான சாரத்ய வேஷத்தை சொல்லிற்று.
தேர் ஊர்ந்தான் ஆகிலும் தார்மன்னர் தங்கள் தலைமேலான் - என்பதாக கண்ணிழிவற்ற தன் மேன்மைக்கு எல்லைநிலமான ''அஹமர்த்தம்'' சொல்லப்பட்டது .

இன்னும் அடுத்த திருமொழி மைநின்ற கருங்கடல்வாய் = ஈன்றவள் இருக்க மணை நீராட்டி - என்று நம்மாழ்வார் சாதித்ததுபோல் பிரளய ஆபத்தில் தன் திருவயிற்றில் நெடுங்காலம் வைத்துப் பாதுகாத்த எம்பெருமான் இருக்க, 
எதிலோர் தெய்வத்தை ஏத்துக்கின்ரீர் 
செய்நன்றி குன்றேன்மின் தொண்டீர்காள்! 
அண்டனையே எத்தீர்களே (11-6-1) 
என்று பரோபதேசமாக பாசுரம் செல்லுகிறது இப்பதிகத்தில். 

நீள்நாகம் சுற்றி = பூர்வமேவா கிருதா ப்ரஹ்மந் ஹஸ்த பாதாதி ஸம்யுதா ஈஸ்வராய நிவேதித்தும் - என்று பகவதர்பிதமான  அவயவங்களை எம்பெருமான் திறத்தில் ஈடுபடுத்தாதபோது பயனற்றன என்று இந்திரிய வசப்பட்டு புறம்பே திரிபவர்களை சாடுகிறார் ஆழ்வார் . 
தூயானை தூய மறையானை தென்னாலி 
மேயானை (11-7-3) என்பதில் 
தூயோன் = பிரமன், சிவன் முதலான தேவதைகள் கொடுத்த வரங்கள் பழுதாகதபடிக்கு சிங்க உருவாயும், மோஹினியாகவும் வந்து ஹிரணியனையும், பஸ்மாசுரனையும்  முடித்து, அவர்கள் வரபலத்தைக் காத்த தூய்மை. 
தூய மறையோன் = தென்னாலி மேயோனான இராமபிரான். எங்கே கண்டோம் என்றால் குலசேகர ஆழ்வார் 
ஆலிநகர்க் கதிபதியே! அயோத்திமனே ! தாலேலோ என்ற பாசுரம் பிரமாணம். 
முள்ளார் முளரியும் ஆம்பலும் முன்கண்டக்கால் 
புள்ளாய் ஓர் ஏனமாய் புக்கிடந்தான் பொன்னாடிக்கு என்று 
உள்ளாதார் (11-7-6)  உயர்ந்த துளசியைக் கொண்டு அர்ச்சித்தாலும் அது அவனுக்கு ஏலாது என்பதை திருவேங்கட முடையானுக்கு பணிப்பூ சமர்ப்பித்த குயாலன் விருத்தாந்தத்தில் இருந்து அறியலாம். 

மாற்றமுள பதிகம் = என்னை போராவிட்டிட்டாய் புறமே என்று நம்மாழ்வாரும் 
தருதுயரம் தடாயேல் உன் சரணல்லால் சரணில்லை என்று குலசேகர ஆழ்வாரும் வினவியதுபோல், இவரும்
மக்கள் தோற்றாக் குழி தோற்றுவிப்பாய் கொல்? என்று அஞ்சி  அலமந்து 
தேஹ சம்பந்தத்தை அறுத்து தனக்கு பிறவிப் பிணியை போக்கியருள வேண்டும் என்று 
ஆற்றங்கரைவாழ் மரம்போல அஞ்சுகின்றேன்.
காற்றத்து இடைப்பட்ட களவர் மனம் போல 
பாம்போடு ஒருகூரையிலே பயின்றாற்போல் 
இருபாடு எரிகொள்ளியின் உள் எறும்பேபோல் 
வெள்ளத்து இடைப்பட்ட நரியினம் போல 
இடையன் எறிந்த மரமே ஒத்திராது 
வேம்பின் புழு வேம்பன்றி உண்ணாது  
என்று பழமொழிகளை உதாரணம் காட்டி  தாம் ஸம்சாரமாற கடலிலே விழுந்து நோவுபடுவதை நிவர்ப்பித்தருள வேண்டும் என்று எம்பெருமானை பிரார்த்தித்து பிரபந்தத்தைத் தலைக் கட்டுகிறார். 

கடியன், கொடியன் ஆகிலும் அவனென்றே கிடக்கும் என்மனம் - என்கிற நம்மாழ்வார் திருவாக்குபோல, ஏனையோர் சம்பந்தம் கரும்புபோல் இனிப்பதேனும் வேம்பின் புழு வெம்பின்றி உண்ணாது - என்று ஈன்றதாய் அகற்றிடினும் அவள்நினைந்தே அழும் குழவி அதுவேபோல் பகவத் சம்பந்தமே ஸ்நிக்தமாக வேண்டி நிற்கிறார் இவரும். 

நாராயண உபநிஷத்தில் ஜகத் ஸ்ருஷ்டியைக் கூறும் இடத்து நாராயணனே ஹயக்ரீவனாக அவதரித்து மதுகைடபர்களை நிரசித்து மதுசூதன் ஆனான் என்று கூறப்பட்டது. அந்தவகையில் இவ்வாழ்வாரும்   
நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் என்று தொடங்கி 
மதுசூதா பணியாய் எனக்கு உய்யும் வகை என்று முடித்திருப்பது அவ்வுபநிஷத்தின் விளக்கமாகவே அமைகிறது. எதுபோலே? என்றால் 
நம்மாழ்வாருடைய 4 வது பிரபந்தமான திருவாய்மொழி உயர்வற என்று தொடங்கி  பிறந்தார் உயர்ந்தே என்று ''உ''  காரத்தில் தொடங்கி  ''து'' காரத்திலும் முடித்தமை  தஸ்ய உதிதி நாம: என்கிற சாந்தோக்யத்தை அடியொற்றி அமைந்தது போலேயன்றோ ? 
பரமனின் நாமம் ஆயிரத்தில் நாராயண நாமம் குரு : என்றால் மதுஸூதன நாமம் குருதம : என்னக்கடவது. காரணம்,  படைப்புக்கு கடவுளான பிரமனுக்கு வேதா மே திவ்யம் சக்ஷு : வேதா மே பரம் தன :  என்பதான வேதங்களை மீட்டு அவனுக்கு உபகரித்த படியால் எனலாம். 

பிரபந்த கர்த்தாவான இவர் தனக்கு பயனை வேண்டும் போது 
அருளாய் உந்தன் அருளே
பணியாய் எனக்கு உய்யும் வகை 
அடியேற்கு அருளாய் உன்னருளே 
என்பதாக விண்ணப்பித்தார் அன்றி 
திருவடி சேர்ப்பாய் என்றோ உம்பர் வானவர் வீடோ பிரார்த்தித்தார் இல்லை. காரணம் அவன் தன் விருப்பப்படி மேல்வீடு தந்தாலும் அன்றி ஸம்சாரத்தில் வைத்தாலும்  '' அடியேன் நான் '' என்பதற்குச் சேர வைத்த விடத்தில் இருப்பை அனுவதித்து அசித்வத் பாரதந்திரியத்தை ஆவிஷ்கரித்தார் என்னவுமாம். 

அடியேன் நான் பின்னும் உன்சேவடி அன்றி நயவேன் 
ஐவாய்ப் பாம்பின் அணைப் பள்ளி கொண்டாய் பரம்சோதீ 
அணியார் பொழில்சூழ் அரங்க நகரப்பா!
துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு (11-8-8)   
என்று மன்றில் புகழ் மங்கைமன் கலிகன்றி சொல் ஆயிரமும் 
நம்மாழ்வார் சாதித்த பண்ணார் தமிழ் பாடல்போல் அரங்கனுக்கே என்னத் தட்டிலை .  

கனிந்தபழம் காம்பின் கடுதியில் வீழ்தல்போல் 
வானில்வேர் பற்றாய் புவனந்  -- தனில்தன் 
கிளைபரப்பும் இப்பிறவித் தொட்டும் அறவே
இளையா தொருமால்தாள் பற்று.  

திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம்.
திருவே சரணம். திருமால் திருவடிகளே சரணம்.

அடியேன் (அகரம்) கிடாம்பி ஸ்ரீநிவாஸ ரங்கன் ஸ்ரீநிவாஸ தாஸன் 
கலியன் ஒலி மாலை என்கிற உபன்யாச தொடரில் இருந்து தொகுத்த 
திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்த பெரிய திருமொழி 
''தியார்த்த ஸங்கிரகம்'' 
முற்றிற்று. 


...

































 சதகம் :

25